காது குத்துதல் நிகழ்வின் வரலாறும் முக்கியத்துவமும் தெரியுமா?

குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வு
குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வு
Published on

காது குத்துதல் என்கிற கலாசார நிகழ்வு பழங்கால வரலாற்றைக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காது குத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய காலம்: குத்தப்பட்ட காதுகளுடன் காணப்படும் ஒரு மிகப் பழைமையான மம்மியின் உடல் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அது கிமு 3300 ஆண்டைச் சேர்ந்த இயற்கை மம்மி ஆகும். அவரது காதுகள் துளைக்கப்பட்டு சுமார் 7லிருந்து 11 மில்லி மீட்டர் விட்டம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காது குத்தும் பழக்கம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நடைமுறையாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

பண்டைய எகிப்து: பண்டைய எகிப்தில் காதணிகள் செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆண்களும் பெண்களும் காது குத்தி காதணிகள் அணிந்திருந்தனர். கிமு 1500ம் ஆண்டிற்கு முந்தைய கல்லறைகளில் காதணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக துட்டன் காமுனின் (பேரரசர்) புகழ் பெற்ற கல்லறையில் காதணிகள் இருந்தன.

பண்டைய இந்தியா: இந்தியாவில் காது குத்துதல் நிகழ்வு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு முக்கியமான கலாசார மற்றும் மத நடைமுறையாகும். கர்ண வேதா சடங்கு, காது குத்துதல் என்கிற பாரம்பரிய இந்து சடங்கு, இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் காது குத்தப்படுகிறது. இந்த நடைமுறை குறைந்தது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்ற குறிப்புகள் இந்திய வேதங்களில் காணப்படுகின்றன.

பண்டைய கிரீஸ் மற்றும் ரோம்: கிரீஸ் மட்டும் ரோமில் பெண்களால் காதணிகள் அணியப்பட்டன கி.மு 500ல் இருந்த கிரேக்க சிற்பங்கள், பெண்கள் காதணிகளை அணிந்திருப்பதை காட்டுகின்றன. அவை பெரும்பாலும் விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்பட்டவை மற்றும் ரத்தின கற்களால் அலங்கரிக்கப்பட்டவை. ரோமானிய பெண்களும் தங்கள் அந்தஸ்தை காட்ட விரிவான காதணிகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.

ஆப்பிரிக்க கலாசாரம்: அங்கே பல நூற்றாண்டுகளாக காது குத்துவது நடைமுறையில் உள்ளது. இதை ஒரு சடங்கு அல்லது பழங்குடி அடையாளத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். கென்யா மற்றும் தான்சானியாவில் மாசாய் மக்கள் பெரிய நகைகளை அணிந்துகொள்ள தோதாக காது மடல்களை நீளமாக வளர்த்து வைக்கும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றவர்கள்.

தண்டட்டி காதணி அணிந்த மூதாட்டி
தண்டட்டி காதணி அணிந்த மூதாட்டி

மறுமலர்ச்சி: இருபதாம் நூற்றாண்டில் காது குத்துதல் நடைமுறை ஒரு மறுமலர்ச்சி கண்டது. 1970கள் மற்றும் எண்பதுகளில் உலகெங்கிலும் உள்ள ஆண்களும் பெண்களும் காது குத்தும் பழக்கத்தை மேற்கொண்டனர், இந்த நேரத்தில் குருத்தெலும்பு போன்ற காதுகளை துளையிடுவதும் பிரபலமடைந்தது.

இதையும் படியுங்கள்:
வாத நோய்களைப் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை பழம்!
குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வு

பழங்குடி நடைமுறைகள்: உலகெங்கிலும் உள்ள பல பழங்குடியின மக்கள் தங்கள் கலாசார அடையாளத்தின் ஒரு பகுதியாக காது குத்துவதை நடைமுறைப்படுத்தினர். உதாரணமாக ஜப்பானின் ஐனு மக்களும் மேற்கு ஆப்பிரிக்காவின் ஃபுலானி மக்களும் தனித்துவமான காது குத்தும் மரபுகளைக் கொண்டுள்ளனர். அவை தலைமுறைகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆன்மிக நம்பிக்கைகள்: இந்து மதத்தில் காதுகளைத் துளைப்பது, உள் காதை அல்லது ஆறாவது அறிவை உள் உணர்வுடன் இணைக்கப்படும் செயல்பாடு என்று நம்பப்படுகிறது. இந்தப் பயிற்சியானது ஆன்மிகப் புரிதலை மேம்படுத்தி மனதின் உள் பாதைகளை திறக்கும் என்று கருதப்படுகிறது. காது குத்தும் பழக்கம் அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் முடிவெடுக்கும் திறனுக்கும் உதவும் என்றும் வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

தென்னிந்தியாவில், பெண்களால் பெரிய தங்கக் காதணிகள் பொதுவாக அணியப்படுகின்றன. அதேசமயம் ராஜஸ்தானில், ‘போர்லா’ போன்ற பாரம்பரிய காதணிகள் பிரபலமாக உள்ளன. நவீன நகர்ப்புற இந்தியாவில், காது குத்துவது ஃபேஷனின் வெளிப்பாடாகவும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com