சென்னை மக்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் பிரச்னையை தீர்ப்பதில் ஏரிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பூண்டி நீர் தேக்கம் இதில் அதிக அளவு பங்கு வகிக்கிறது. இந்த நீர் தேக்கம் உருவான வரலாறு மற்றும் அதன் பெருமை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த ஏரி சென்னையின் குடிநீர் தாகத்தைத் தணித்து வருகிறது. காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும் நிலையில், மிக சுமூகமான முறையில், ஆந்திராவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 40 ஆண்டுகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இதில், பூண்டி நீர்த்தேக்கம்தான் சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்ட முதல் நீர்த்தேக்கம். அதன் பிறகு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகள் சென்னை குடிநீர் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. என்னதான் மற்ற நீர்த்தேக்கங்களில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டாலும், முக்கிய நீராதாரமாக விளங்குவது பூண்டி நீர்த்தேக்கம்தான்.
வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதன் காரணமாக 1939ம் ஆண்டு சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் சென்னை மாநகரின் மேயராக சத்தியமூர்த்தி இருந்தார். அப்போது சென்னை மாநகர பொறியாளராக ஆனந்தராவ் என்பவர் இருந்தார்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நீர்த்தேக்கம் ஒன்று கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான அறிக்கையையும் அவர்கள் தயாரித்தனர். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், ஆங்கிலேய அரசு அந்த அறிக்கையை விரிவாக அலசி ஆராய்ந்து, திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டது.
பூண்டி நீர்த்தேக்கம், கொற்றலை ஆற்றின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அகற்றப்பட்டன. மேலும், நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோயிலும் அகற்றப்பட்டு கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் நீர் வற்றும்போது பழைமையான ஊன்றீஸ்வரர் கோயிலைக் தரிசிக்கலாம்.
பூண்டி நீர்த்தேக்கம் கட்டுவதற்கு 1940ம் ஆண்டு 61.07 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 2 பங்கு தொகையை சென்னை மாநகராட்சிக்கு ஆங்கிலேய அரசாங்கம் கடனாகவும், ஒரு பங்கு தொகையை மானியமாகவும் கொடுத்தது. 1940 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆதர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நீர்த்தேக்கத்தை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டனர். ஆனால், இரண்டாம் உலகப் போர், மழை வெள்ளம் போன்ற காரணங்களால் ஏற்பட்ட தாமதம் இந்தத் திட்டத்தை முடிக்க 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
ஒருவழியாக 65 லட்சம் ரூபாயில் பூண்டி நீர்த்தேக்கத்தை கட்டி முடித்தனர். 1944ம் ஆண்டு ஜூன் மாதம் பூண்டி நீர்த்தேக்கத்தை கவர்னர் ஆதர் ஹோப் திறந்து வைத்தார். பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது அதற்கு காரணமாக இருந்த சத்தியமூர்த்தி உயிரோடு இல்லை.
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தியின் பெயரை வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தியின் பெயர் சூட்டப்பட்டது.
பூண்டி அணைக்கட்டின் நீளம் 770 அடி, அகலம் 18 அடி. 35 அடி உயரம் நீர்மட்டம் கொண்ட இந்த அணைக்கட்டில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். 16 மதகுகள் கொண்ட இந்த அணைக்கட்டில் இருந்து மழை வெள்ளக் காலத்தில் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும்.
ஆரம்பத்தில் இதில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990 முதல் 1996ம் ஆண்டு வரை பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து தற்போது 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் ஏரி முழுவதுமாக நிரம்பும் காலங்களில் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்குள் விடப்படுகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பெரும் அளவில் போக்கும் இந்த பூண்டி நீர்த்தேக்கம் பற்றி படித்து வியந்து போய் இருப்பீர்களே.