உடல் ஆரோக்கியம் காக்கும் புரோட்டீன் சத்தின் அவசியத் தேவை தெரியுமா?

புரோட்டீன் உணவுகள்
Protein foods
Published on

மது உடலில் நீர்ச்சத்துக்கு அடுத்து புரோட்டீன் சத்துதான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது அதை உடனே சேர உதவுவது, கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்ட்ரா சக்தியை கொடுப்பது, பிறந்த குழந்தை வளர உதவுவது, நமது செல்களின் தேய்மானத்தை குறைத்து அதை புதுப்பிப்பதற்கு, காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதற்கும், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற ஹீமோகுளோபின்களை உற்பத்தி செய்ய உடலுக்கு புரோட்டீன் மிகவும் அவசியம்.

நமது உடலில் உள்ள என்சைம்கள், ஹார்மோன்கள் சரியாக வேலை செய்கிறதா என கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது புரோட்டீன்தான். இந்தளவு பெருமைக்குரிய புரோட்டீன்களின் பின்னால் 23 அமினோ அமிலங்கள் மறைந்துள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து புரோட்டீனுக்கு சக்தியை வழங்குகின்றன. சில உணவுப் பொருட்களில் புரோட்டீன் சத்து அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் இருப்பதற்குக் காரணம் அதன் பின்னால் இருக்கும் இந்த  அமினோ அமிலங்கள்தான்.

உடல் உப்பி காணப்படுவது, சருமம் காய்ந்து போய் தடிப்பது, தலைமுடி கொட்டத் தொடங்குவது, உடலில் வெடிப்புகள் தோன்றி எரிச்சல் ஏற்படுவது, எதை சாப்பிட்டாலும் குறைவாகவே ஜீரணமாவது. இரத்தம் குறைந்து விடுவது. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மனநிலைப் பாதிப்பு போன்றவற்றுக்கு புரோட்டீன் குறைபாடே காரணம்.

நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு வகையில் புரோட்டீனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரோட்டீன் அவசியம். இவற்றை நாம் சாப்பிடும் உணவு மூலமாக பெறுவதே நல்லது. சைவம் சாப்பிடுகிறவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுகிறவர்கள் மீன், முட்டை இறைச்சி மூலமாகவும் புரோட்டீன் சத்தைப் பெறலாம்.

புரோட்டீன் அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மாமிசம், மீன், முட்டை, பாதாம், முந்திரி, பிஸ்தா, சோயா பீன்ஸ், நிலக்கடலை, எள், கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயறு இவற்றை அடுத்து தேங்காய், சோளம், கோதுமை, அரிசி போன்றவற்றில் உள்ளது. பால் மற்றும் அதன் துணை தயாரிப்புகளான சீஸ், நெய் மற்றும் தயிர் ஆகியவை சிறந்த புரோட்டீன் ஆதாரங்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த மாதிரியான நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா?
புரோட்டீன் உணவுகள்

உங்கள் உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடக்காமல், உங்கள் உணவில் 25 முதல் 30 சதவிகிதம் புரோட்டீன் உணவுகளை சேர்த்துக்கொண்டால், நீங்கள் இயற்கையாகவே ஒவ்வொரு நாளும் வேகமாக கலோரிகளை எரிக்கலாம். காலையில் 35 கிராம் புரோட்டீன் நிறைந்த உணவுகளான பால், முட்டை, மீன், இறைச்சி, தயிர் இவற்றை கலந்து எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் முழுவதும் குறைவாகத்தான் சாப்பிடுவோம் என்கிறார்கள் மிசோசூரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

காலை மற்றும் மதிய உணவுகளில் புரோட்டீன் அதிகமாயிருந்தால் அது இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் தசையை பலப்படுத்துவதுடன் முதுமை வராமலும் பாதுகாக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வயதானவர்கள் புரோட்டீன் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதால் அது அவர்கள் தசைகளின் இயக்கத்தில் தொய்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கிறார்கள்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள் இன்சுலினை மிகக் குறைவாகப் பயன்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, புரோட்டீன் நிறைந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. புரோட்டீன்கள் ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகின்றன.

இந்தியர்கள் புரோட்டீன் குறைபாடுடன் இருப்பதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, அன்றாடத் தேவைக்குரிய புரோட்டீன் சத்துகளை உணவின் மூலமாக மட்டுமே பெற வேண்டும். புரோட்டீன் ஆரோக்கியம் காக்கும் சத்துதான். ஆனால், அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகப்படியான புரோட்டீன் சத்து சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். எலும்பு வலிமையைப் பாதிக்கும், குமட்டல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com