‘பாக்ஸிங் தினம்’ என்றதும் ஏதோ குத்துச்சண்டை போட்டி என்று நினைத்துவிட வேண்டாம். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முடிந்த அடுத்த தினமான டிசம்பர் 26 அன்று, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் இந்த பாக்ஸிங் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்டு முழுவதும் தங்களுக்கு சேவைகளை வழங்கிய தொழிலாளர்களுக்கு பரிசுகள் அல்லது பரிசுப் பெட்டிகளை வழங்கும் நாளைக் குறிக்கிறது.
ஊழியர்களைக் கௌரவித்தல்: இது முதன் முதலில் பிரிட்டனில், வீட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்கான ஒரு நாளாகத் தொடங்கியது. செல்வச் சீமான்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை மிக விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அவர்களது வீடுகளில் கிறிஸ்மஸ் அன்று ஏராளமான உணவு வகைகளை, வீட்டு சமையலறை ஊழியர்கள் சமைத்துத் தருவார்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களில் வீட்டு வேலையாட்கள் கடுமையாக உழைத்து அந்த விருந்தைத் தயார் செய்வார்கள். எனவே, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்குப் பரிசுப் பெட்டிகளை அளித்தனர்.
தபால்காரர்களுக்கு பாராட்டு: தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத அன்றைய காலகட்டத்தில் தகவல்களை, செய்திகளைக் கொண்டு செல்லும் மெசஞ்சர் பையன்கள், தபால்காரர்கள் ஆண்டு முழுவதும் உழைத்தனர். அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நாளான டிசம்பர் 26ம் தேதி நண்பர்கள் தங்கள் வீடுகளில் வேலை செய்யும் வேலையாட்கள் மற்றும் தமக்கு உதவும் பிற பணியாளர்களுக்கு ஊதியத்துடன் பல பரிசுகளை வழங்கினர். ஆண்டு முழுவதும் அவர்கள் செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நாணயங்கள் நிரப்பப்பட்ட சிறிய பரிசுப் பெட்டிகளை அளித்தனர்.
அறச்செயல்களுக்கான நாள்: அதேபோல. தேவாலயத்தின் கதவுகளுக்கு வெளியில் சிறிய பரிசுப் பெட்டிகளில் ஏழைகளுக்கு நன்கொடைகளை சேமித்தனர். அன்று முழுவதும் அந்தப் பெட்டிகளின் வசூல் ஆகும் பணத்தை குருமார்கள் ஏழை மக்களுக்கு வழங்குவார்கள். எனவே, 26ம் தேதி அறச்செயல்களுக்கான நாளாக அங்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தற்போதைய பாக்ஸிங் டே கொண்டாட்டங்கள் பழைய முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. டிசம்பர் 26ம் தேதியன்று மக்கள் தங்களுக்கு மிகப் பிடித்த விளையாட்டுகளில் நேரம் ஒதுங்குகிறார்கள். கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள் போன்ற தங்களது விருப்பமான விளையாட்டுகளில் ஒன்றிணைந்து விளையாடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் கால்பந்து போட்டிகள் மற்றும் குதிரைப் பந்தயம் நடைபெறுகிறது.
பாக்ஸிங் தினத்தன்று இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் பல பெரிய கடைகள் தங்கள் பொருட்களுக்கு நிறைய தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவிக்கிறார்கள். மக்கள் குடும்பமாக சேர்ந்து கொண்டாடுவதும், விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதும் ஷாப்பிங் செய்வதுமாக இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சிலர் தொண்டு நடவடிக்கைகள் மற்றும் சேவைகளிலும் ஈடுபடுகிறார்கள். 2004 வரை இங்கிலாந்தில், அந்த நாளில் நரி வேட்டையும் இருந்து வந்தது. பின்பு அது தடை செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள பல தொழில் முறை கால்பந்து கிளப்புகள் பாக்ஸிங் தினத்தன்று போட்டிகளை நடத்துகின்றன. மேலும். ரசிகர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த நாளில் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் படகு பந்தயங்கள் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றன. ஜெர்மன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தொடர்ச்சியான விருந்துகளில் ஈடுபடுகிறார்கள்.