கோபம், எரிச்சல், சந்தோஷம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளுக்கும் நாம் சாப்பிடும் உணவு பொருட்களுக்கும் சம்பந்தம் உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மனித மூளையில் பல நியூரோ டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இவைதான் உடல் உறுப்புகளின் கட்டளையை ஏற்று மூளைக்கு தகவல்களை எடுத்துச் செல்கின்றன. அவற்றில் பிரதானமாக இருப்பதுதான் ‘செரடோனின்’ என்ற நியூரோ டிரான்ஸ் மீட்டர்.
இது அதிகளவில் மூளையில் சுரந்தால் நாம் சந்தோஷமாக வளைய வருவோம். இது அளவு குறையும்போதுதான் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள்தான் இந்த செரடோனின் அளவை நிர்ணயம் செய்கின்றன. மன உளைச்சலைப் போக்கும் ஆற்றல் மிகு 5 உணவுப் பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆப்பிள்: மனச்சோர்வுக்கு மிகச்சிறந்த மருந்து ஆப்பிள்தான். அதிகளவில் வைட்டமின்கள் அடங்கியுள்ள ஆப்பிளில் வைட்டமின் பி1, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. நரம்பு செல்களின் செயல்பாடுகளை நிர்ணயிக்கின்ற குளூடாமிக் அமிலத்தை உடலில் உண்டாக்கும் சக்தி கொண்டவை இவை. எனவே, தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு குறைவு என்கிறார்கள். குறிப்பாக, ஆப்பிள் பழத்தை பால் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் நல்லது.
ஏலக்காய்: ‘நறுமணப் பொருட்களின் ராணி' என்று அழைக்கப்படுகிற ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்த டிகாஷனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர எத்தகைய மனச்சோர்வும் சட்டென்று மறையும். உடலை தூய்மைப்படுத்தும் தன்மையை கொண்ட ஏலக்காய் உடல் உலர்ந்து போகுதல், நாக்கில் சுவையின்மை, விக்கல், அடி வயிற்றில் ஏற்படும் நோய்கள், தலைவலி, சிறுநீர் சரியாகப் போகாமல் இருப்பது போன்ற உடல்நலக் கோளாறுகளையும் சரி செய்யும்.
முந்திரி பருப்பு: இதில் ‘தையமின்' உள்பட, பி வகை வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். அதோடு, நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். ‘ரிபோஃபிளோவினும்’ முந்திரி பருப்பில் அதிகம் உள்ளது. முந்திரி பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
மிளகு: இதிலுள்ள ‘கேப்சைஸின்’என்ற காரப்பொருள் மூளையில் உள்ள எண்டோர்பின்களின் செயல்பாட்டை அதிகப்படுத்துவதன் மூலம் மூளை ஆக்டிவாக செயல்படுகிறது. இதன் விளைவு புத்துணர்ச்சி நம் உடம்பில் தானாகவே தொற்றிக் கொள்கிறது.
பூண்டு: இதில் உள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் உடலை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. பூண்டு பற்களை தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளுள் ஒன்று, இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகும். பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது உடலினுள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. எனவே, உங்களுக்கு அடிக்கடி சளி பிடித்தாலோ அல்லது நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தாலோ, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 1 பூண்டு பல்லை தினமும் காலையில் உட்கொண்டு வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலு பெறும்.