டெடி பியர் பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்குக் கூட மிகப் பிடித்தமானவை. டெடி பியர் பொம்மைகள் அமெரிக்க அரசியல், ஜெர்மன் கைவினைத் திறன் மற்றும் சர்வதேச ஈர்ப்பு ஆகியவற்றின் கண்கவர் கலவையாக இருபதாம் நூற்றாண்டில் ஒரு அழகான வரலாற்றை கொண்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தியோடர் டெடியும், கரடியும்: 1902ல் மிசிசிப்பியில் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் டெடி ரூல்ஸ்வெல்ட் கருப்பு கரடிகளை வேட்டையாடும் பணியில் இருந்தார். ஆனால், அன்று முழுவதும் முயற்சி செய்தும் அவரால் ஒரு கரடியைக் கூட வேட்டையாட முடியவில்லை. அதனால் அவருடைய உதவியாளர்கள் ஒரு கரடியை எப்படியோ தேடிப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி, ஜனாதிபதியை சுடச் சொன்னார்கள். ஆனால், செயலற்ற நிலையில் இருக்கும் அந்த விலங்கை கொல்வது முறையல்ல என்று கூறி அதை அவிழ்த்து விடும்படி கூறினார் தியோடர் டெடி. இந்த சம்பவம் அமெரிக்கா முழுக்க பரவியது. வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் கிளிஃபோர்டு பெர்ரிமேன் என்பவர் ரூஸ்வெல்ட்டையும் கரடியையும் அருகருகே வரைந்து ஒரு அரசியல் கார்ட்டூனாக உருவாக்கினார்.
டெடி பியர் உருவாக்கம்: இந்தக் கார்ட்டூனைப் பார்த்த நியூயார்க்கை சேர்ந்த கடைக்காரரான மோரிஸ் மிக்டோமும் அவரது மனைவி ரோஸ் மிக்டோமும் உத்வேகம் அடைந்து ஒரு சிறிய பட்டுக் கரடியை உருவாக்கி தங்கள் கடை ஜன்னலில் காட்சிப்படுத்தினர். ரூஸ்வெல்ட்டின் கருணையுள்ள செயலை கவுரவிக்கும் வகையில் அதை டெடி’ஸ் பியர் என்று அழைத்தனர். மேலும் அவற்றை பெருமளவில் உற்பத்தி செய்ய ஐடியல் டாய் என்கிற நிறுவனத்தை நிறுவினார். 1903ல் அமெரிக்காவில் டெடி பியர் வணிக வெற்றியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஜெர்மனியில் டெடி பியர்: அதே நேரத்தில், மார்கெட் ஸ்டீஃப் என்கிற ஜெர்மன் பொம்மை தயாரிப்பாளர் இதுபோன்ற ஸ்டஃப்டு கரடியை உருவாக்கினார். போலியோவால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தையல் தொழிலாளியான ஸ்டீஃப், ஸ்டஃப்டு விலங்குகளை உருவாக்கத் தொடங்கினார். அவரது மருமகன் அசையும் மூட்டுக்கள் கொண்ட ஒரு ஸ்டஃப்டு கரடி பொம்மையை உருவாக்கி, பொம்மைக் கண்காட்சியில் அந்த கரடி பொம்மையை காட்சிப்படுத்தினார். 3000 பொம்மைகள் ஒரு அமெரிக்கரால் வாங்கப்பட்டது.
டெடி பியர் மேனியா: 1906ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் டெடி பியர் மேனியா பரவியது. டெடி பியர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கூட பிடித்தமான பிரபலமான பரிசுப் பொருளாக மாறியது. பல்வேறு அளவுகள் மற்றும் பொருள்களில் கரடி பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டன. சில ஆடம்பர பொம்மைகள் மொஹேர் அல்லது பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்டன.
கலாசாரத் தாக்கம்: டெடி பியர் பொம்மைகளின் அப்பாவித்தனமான தோற்றம் குழந்தைகளின் அன்பான, ஆறுதலின் அடையாளமாக மாறியது. இது குழந்தை இலக்கியங்களில் பாடல்களாகவும் கவிதைகளாகவும் தோன்றியது. டெடி பியர் பற்றிய புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள், குழந்தைகளிடம் மேலும் டெடி பியரைக் கொண்டு சேர்த்தது.
சின்னம் மற்றும் உணர்வு: வணிக வெற்றியை தாண்டி டெடி கரடி பொம்மை மக்களின் இதயங்களில் தனி இடத்தை பிடித்தது. இது பெரும்பாலும் அன்பு ஆறுதல் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் நேசத்திற்குரிய தோழமையாகவும் பெரியவர்களுக்கு ஒரு சேகரிப்பாளரின் பெருமைமிகு பொருளாகவும் செயல்படுகிறது.
டெடி பியர் தினம்: அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் பெயர்கொண்ட டெடி பியர் ஒரு அரசியல் சின்னமாக இருந்து குழந்தை பருவ பாசத்தின் சின்னமாக மாறி, உலகளவில் மிகவும் பிரபலமான பொம்மைகளில் ஒன்றாக தற்போது உள்ளது. செப்டம்பர் 9ம் தேதியான இன்று டெடிபியர் நாளாக அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள்.