சர்.ஹென்றி கோல் என்ற பிரிட்டிஷ்காரர்தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1843ல் முதலில் தொடங்கியவர். மிகவும் பெரும் பணக்காரராக இருந்த இவர் தனது சொந்தக்காரர்களுக்கும் நெடுந்தொலைவிலுள்ள சொந்தக்காரர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவிக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் தனக்குத் தேவையான கிறிஸ்துமஸ் கார்டுகள் தயார் செய்துத் தர ஜெ.ஸி.ஹோஸ்லி என்ற ஓவியரை அணுகினார். அந்த ஓவியரும் தனது சித்திரத் திறமையை பயன்படுத்தி விதவிதமான வர்ண கலவையைப் பயன்படுத்தி அழகழகான பற்பல வண்ண வாழ்த்து அட்டைகளை உருவாக்கினார். அதிலிருந்து தனக்குத் தேவையான வாழ்த்து அட்டைகளை எடுத்துக்கொண்டு மீதமுள்ள வாழ்த்து அட்டைகளை ஹோஸ்லி வசம் ஒப்படைத்தார் ஹென்றி.
ஓவியர் ஹோஸ்லி அன்று உருவாக்கிய வாழ்த்து அட்டைகளில் A MERRY christmas And HAPPY New Year என்ற வாக்கியம் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு அவரது பெயரை நினைவூட்டுகிறது. அவர் தயாரித்த முதல் வாழ்த்து அட்டையில் என்ன படம் இருந்தது தெரியுமா? பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பதும் ஏழைகளுக்கு ஆடை தானம் கொடுப்பது போலவும் வரையப்பட்டிருந்தது.
ஓவியர் ஹோஸ்லியை தொடர்ந்து பலரும் வாழ்த்து அட்டைகளை தயாரிக்கத் தொடங்கினர். 1866ல் ரபேல் டெக் என்ற பிரிட்டிஷ்காரர் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து வழிவழியாக கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தார். அவரது அட்டைகளில் வண்ண வண்ண மலர்கள், மிருகங்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவின் பற்பல உருவங்கள் என்று இருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பிரிட்டிஷ் அரசு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்ற தபால்களுக்கு பாதி விலை வாங்கியது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் உருவாக்கியது மேலைநாட்டினர் என்றாலும், மிகவும் விலை கூடிய கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தவர் நம் இந்தியரே. பரோடா அரசை ஆண்ட ஹெய்க்வாட் குடும்பத்தினர் 1903ம் ஆண்டு அன்றைய மன்னர் ஒரு வெளிநாட்டு பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை அனுப்பி வைத்தார். அவர் யானை தந்தத்தில் நாற்பத்து நான்கு ரத்தின கற்கள் பதித்து வினோதமான கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை உருவாக்கினார். அதனை உருவாக்கிட கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியது. அன்றே அதன் விலை கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் ஆகும்.
உலகிலேயே மிகச் சிறிய கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை 1929ம் ஆண்டு எட்டாம் எட்வர்டு மன்னருக்கு அளிக்கப்பட்ட வாழ்த்து அட்டைதான். ஒரு அரிசியின் மீது இந்த வாழ்த்து பொறிக்கப்பட்டிருந்தது. பூதக்கண்ணாடியை கொண்டுதான் இந்த எழுத்துக்களைப் படிக்க முடியும்.
இங்கிலாந்து விமானப் படையினர், அமெரிக்க விமானப் படையினருக்கு அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைதான் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை. 24 சதுர அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி 30 பவுண்டு எடை விமானத்திலிருந்து கொடிகள் கீழே பறந்து விழுவது போல் இந்த அட்டையில் படம் வரையப்பட்டிருந்தது. மேலும், கொடிகளில் வாழ்த்துச் செய்தியும் எழுதப்பட்டிருந்தன.
ஆண்டுதோறும் அமெரிக்காவின் நாலு பில்லியன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்புகிறார்கள். ஆண்டுக்குக் கணக்கில்லாமல் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வருபவர்கள் அமெரிக்கர்கள்.
நீங்களும் மொபைல் போனில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பாமல், வாழ்த்து அட்டைகள் அனுப்பி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடலாமே!