
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும், சமூக நிகழ்வுகள், சடங்குகள் போன்றவற்றில் தினசரி பயன்படுத்தும் ஒன்றாக வெற்றிலை பாக்கு (Betel nuts) முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, சாப்பாட்டிற்குப் பிறகு வெற்றிலைப் பாக்கு போடுவது என்பது ஒரு பழக்கமாக மட்டுமின்றி, பல ஆண்டுகால மரபு, கலாச்சாரம், சமூக முக்கியத்துவத்திற்குரியது.
சாப்பிட்டபின் வெற்றிலை பாக்கு (Betel nuts) போடுவது என்பது இந்தியாவிற்கே உரித்தான ஒரு பழக்கமாகும். வெற்றிலைக் கொடி இந்தியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் இயற்கையாகவே வளர்கிறது. பாக்கு மரம் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இந்த இரண்டும் இணைந்து ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் உருவாக்குகின்றன. வெற்றிலை பாக்கின் பயன்பாடு குறித்த குறிப்புகள், பழங்கால இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சங்க இலக்கியங்களிலும், பின்னர் வந்த சமஸ்கிருத இலக்கியங்களிலும் வெற்றிலைப் பாக்கு சார்ந்த குறிப்புகள் உள்ளன. இதன் மூலமாக இது அன்றாட வாழ்வில் மட்டுமின்றி சடங்குகள், பூஜைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
வெற்றிலை பாக்கிற்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி, வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூச்சுக் கோளாறு உள்ளவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு நிவாரணம் அளிக்கிறது. இதன் காரணமாகவே சாப்பிட்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் வந்துள்ளது.
ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு சென்றால், அங்கு வெற்றிலைப் பாக்கு (Betel nuts) போடுவது அல்லது சடங்குகளில் வெற்றிலை பாக்கு கொடுப்பது ஒரு வழக்கமாக உள்ளது. இது மரியாதை மட்டும் நட்பின் அடையாளமாகும். ஆனால், தற்போதைய காலத்தில் வெற்றிலைப் பாக்கின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு, புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்ற அறிவியல் ஆதாரங்கள் வெளிவந்த பிறகு, இதன் பயன்பாட்டை பலர் குறைத்துக் கொண்டனர். மேலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றங்களால் வெற்றிலைப் பாக்கை விட வேறு பல விஷயங்களை மக்கள் தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இன்றைய காலத்தில், வெறும் சடங்கு சம்பிரதாய விஷயங்களில் மட்டுமே, வெற்றிலைப் பாக்கு பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.