தனி தொகுதிகளின் வரலாறு தெரியுமா?

Do you know the history of Reserved constituency?
Do you know the history of Reserved constituency?
Published on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. தொகுதி எங்கும் பிரச்சாரங்கள் சூடிபிடிக்கத் தொடங்கி விட்டன. தொகுதிகளில் தனி தொகுதி என சில தொகுதிகள் வரையறுக்கப்பட்டிருப்பதை அறிவோம். அது என்ன தனி தொகுதி? அதில் என்ன அப்படி சிறப்பம்சம்? எதனால் அதை தனி தொகுதி என்று சொல்கிறோம் என்ற கேள்விகளுக்கான பதிலை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில், 131 தொகுதிகள் ‘தனி' தொகுதிகளாக மத்திய அரசால் வரையறை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏழு நாடாளுமன்ற தொகுதிகள் தனி தொகுதிகளாக உள்ளன. இந்தியாவில் தனி தொகுதி எப்படி உருவானது என்பதன் வரலாறு, ‘இந்திய முஸ்லிம் லீக்' கட்சி ஆரம்பித்த புள்ளியில் இருந்து தொடங்குகிறது.

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' கோரிக்கையை இந்திய முஸ்லிம் லீக் வைத்தது. இதன்படி குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த வகுப்பினர் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இதனிடையே 1909ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இயற்றிய மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கியது. ஆங்கிலேய அரசு, இடஒதுக்கீட்டு முறைக்கு அனுமதியும் அளித்தது. பின்னர் 1919ம் ஆண்டு சீக்கியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பிரிவினருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

இதனிடையே தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். தாழ்த்தப்பட்டோர்களை ஹிந்துக்களாகக் கருதக் கூடாது என்றும், அவர்களை ‘அரசியல் ரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்கள்' எனக் கருத வேண்டும் என்று அம்பேத்கர் கோரிக்கை விடுத்தார்.

இது ஒருபுறம் எனில், மோதிலால் நேரு (ஜவாஹர்லால் நேருவின் தந்தை) தலைமையிலான குழு, 1928ம் ஆண்டு தாக்கல் செய்த வரைவு அறிக்கையில் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' நீக்கப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் ‘தனி' தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, 1931ம் ஆண்டு நடந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தி, ஜின்னா, அம்பேத்கர், சரோஜினி நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்டோருக்கும் 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என அம்பேத்கர் காந்தியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தார். ஆனால், காந்தி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோருக்கு 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அளிக்கப்பட்டால், ஹிந்து மதத்திலிருந்து தனிப் பிரிவினராக அவர்கள் பிரிந்து விடுவர் என்று காந்தி அஞ்சியதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அம்பேத்கர், மதன் மோகன் மாளவியா உள்ளிட்டோர் காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 1932ம் ஆண்டு ‘பூனா ஒப்பந்தம்' கையெழுத்தானது. அதன்படி, தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக, இடஒதுக்கீடு அடிப்படையில் ‘தனி' தொகுதிகள் வழங்க மகாத்மா காந்தி ஒப்புக் கொண்டார். இதன் அடிப்டையில் 1935ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தில், ‘வகுப்புக் கொடை' அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி நடைபெற்ற 1937ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தாழ்த்தப்பட்டோருக்கு ‘தனி' தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, 1946ம் ஆண்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இடைக்கால அரசின் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கரை சட்ட அமைச்சராக நியமித்தார். இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க 1946ம் ஆண்டு ‘அரசியல் நிர்ணய சபை' அமைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அரசியல் நிர்ணய சபை, இடஒதுக்கீடு அடிப்படையில், பட்டியல் இனத்தவர்களுக்கு ‘தனி' தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தியது.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்தியப் பெண்!
Do you know the history of Reserved constituency?

அரசமைப்புச் சட்டத்தின் 330வது பிரிவின் கீழ் பட்டியல் இனத்தவர்களுக்கு லோக் சபாவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனிடையே குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ‘மறுவரையறை குழு', மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதியில், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட வேண்டிய ‘தனி' தொகுதிகள் குறித்து முடிவு எடுத்தது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகள், சுழற்சி முறையில் ‘தனி' தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

1951-1952ம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகள் 489 ஆக இருந்தது. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94 ஆக இருந்தது. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் என்ற முறையும், சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் இருந்தது.

இது எப்படி இருந்தது என்றால், ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள்/பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே போட்டார்கள். இதனிடையே 1961 இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளது போல மாறியது. தனி தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்; அனைத்துத் தரப்பினரும் அவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முறை கொண்டுவரப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com