சர்ச்சைக்குரிய கச்சத்தீவு வரலாறு தெரியுமா?

கச்சத்தீவு
கச்சத்தீவு
Published on

‘கச்சத்தீவு’ எனும் பெயரைக் கேட்டாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது, ‘இந்தத் தீவு யாருக்கு சொந்தம்’ என்பதுதான். இந்த கச்சத்தீவின் வரலாறு என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதி, ‘பாக் நீரிணை’ எனப்படுகிறது. 1755லிருந்து 1763 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக்கின் பெயர்தான் இந்த நீரிணைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. பாக் நீரிணைப் பகுதியை ஒரு கடல் என்றே சொல்ல முடியாது. பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்தப் பகுதியில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவிலும் பாக் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகச் சிறிய தீவுதான் கச்சத்தீவு. இதன் பரப்பளவு சுமார் 285 ஏக்கர். இதன் அதிகபட்ச அகலமே 300 மீட்டர்தான். மனிதர்கள் யாரும் வசிக்காத இந்தத் தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தக் கோயிலில் ஒரு வாரத்திற்கு வழிபாடு நடப்பது வழக்கம். 1983ல் இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்ட பிறகு இந்த வழிபாடு தொடர்ச்சியாக நடப்பது தடைபட்டது.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இந்த ஆலயத்தைக் கட்டியதாகவும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் இந்தக் கோயிலில் பூசை வைப்பார் என்றும் கெஸட்டியர் சொல்கிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டிஷார் இந்தத் தீவை வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி செய்யப் பயன்படுத்தினார்கள்.

புனித அந்தோணியார் தேவாலயம்
புனித அந்தோணியார் தேவாலயம்

கச்சத்தீவின் உரிமை யாருக்கு?

ராமநாதபுரம் ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகளை வைத்தே 1974 வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எல்லா ஆவணங்களும் புதுதில்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. அவை தற்போது ரகசிய ஆவணங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. 1902ல் இந்தத் தீவை அவருக்கு இந்திய அரசு வழங்கியது. அவருடைய ஜமீனுக்காக அவர் வழங்க வேண்டிய பெஷ்குஷ் (குத்தகைத் தொகை) இந்தத் தீவையும் உள்ளிட்டே கணக்கிடப்பட்டது. இந்தத் தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை, தீவில் மேய்ச்சல் உரிமை, வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் உரிமை ஆகியவற்றை ராமநாதபுரம் ராஜா குத்தகைக்கு விட்டிருந்தார்.

இதற்கு முன்பாகவே 1880 ஜூலையில் முகமது அப்துல்காதர் மரைக்காயர் என்பவரும் முத்துச்சாமிப் பிள்ளை என்பவரும் ராமநாதபுரம மாவட்ட துணை ஆட்சியர் எட்வர்ட் டர்னர் பெயரில் ஒரு குத்தகை பத்திரத்தைப் பதிவு செய்தார். சாயம் தயாரிப்பதற்காக 70 கிராமங்களிலும் 11 தீவுகளிலும் வேர்களைச் சேகரிக்க இந்த குத்தகை உரிமை வழங்கியது. அந்த 11 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்று. 1885ல் இதே மாதிரியான இன்னொரு குத்தகைப் பத்திரம் கையெழுத்தானது. 1913ல் ராமநாதபுரம் ராஜாவுக்கும் இந்தியாவுக்கான வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் குத்தகைப் பட்டியலிலும் கச்சத்தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதாவது, இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்ததே தவிர, இலங்கையின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. 1948 செப்டம்பர் ஏழாம் தேதி மெட்ராஸ் எஸ்டேட் (அபாலிஷன் அண்ட் கன்வர்ஷன் இன்டு ரயத்வாரி) சட்டத்தின் கீழ் சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது கச்சத்தீவு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது.

தேவாலய திருவிழா
தேவாலய திருவிழா

1972ல் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகிறது. கச்சத்தீவின் சர்வே எண் 1250. இருந்தபோதும், கச்சத்தீவு ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற வகையிலேயே அந்த விவகாரத்தை அணுகியது இலங்கை அரசு.

இதையும் படியுங்கள்:
எதிராளி பலம் பெறுவது எப்போது?
கச்சத்தீவு

பிரச்னை துவங்கியது எப்போது?

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், ‘கச்சத் தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம்’ என்று சொன்னார். இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே, சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை. ஆனால், தற்போது கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதாகவும் அதை மீட்க வேண்டும் என இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இன்று வரை இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com