தமிழர் வாசித்த முதல் இசைக்கருவி ‘யாழின்’ வரலாறு தெரியுமா?

yazh musical instrument
yazh musical instrument
Published on

ரம்புக் கருவியாகிய யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். ஆதிக்கருவியாகிய யாழ் முற்றிலுமாக மறைந்து அதன் வழி வந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதலிடம் வகிக்கிறது.

யாழ் இசைக்கருவியின் வரலாறு: குறிஞ்சி நிலத்தின் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பட்ட நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், வில்யாழ், மகரயாழ், சகோடயாழ், ஆதியாழ், செங்கோட்டியாழ், கீசகயாழ், நாரதயாழ் என்று அறிய முடிந்தாலும் அதன் வடிவங்களை அறிய முடியவில்லை.

யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் பாடிக்கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி, மூன்று, ஐந்து, ஏழு, ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது.

யாழின் அமைப்பு: யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக் கருவி. இதன் இசை ஒலிப்பெருக்கி தணக்கு என்னும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்த தோலுக்கு, ‘போர்வைத்தோல்’ என்று பெயர். போர்வைத் தோலின் நடுவில் உள்ள மெல்லிய குச்சிகள் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் ‘மாடகம்' அல்லது ‘முறுக்காணிகள்' இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச்சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாக காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளை சுருதி கூட்டினர்.

யாழ் இசைக்கும் முறை: யாழ் வாசிக்கும்போது இசை, குரலை நேர்த்தியான முறையில் அமைத்துச் செல்லும் தன்மை கொண்டது. பாடல்களும், இசையும் யாழில் வாசிக்கப்படும்போது மனதைக் கொள்ளைக்கொள்ளும் தன்மை கொண்டது. யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்பட்டிருக்கும். சுத்த சுரங்களே அதில் வாசிக்க முடியும். யாழை சுத்த மேளமாகிய செம்பாலை அல்லது ஹரிகாம்போஜி மேளத்துக்கு முதலில் சுருதி கூட்டி பின்னர் வேறு இராகங்களை கிரக பேதம் செய்து வாசித்தனர்.

இதையும் படியுங்கள்:
செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!
yazh musical instrument

புறநானூறு, கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம், ஆற்றுப்படை நூல்கள், திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களில் யாழ் குறித்த செய்திகள் உள்ளன. இந்த செய்திகள் திருக்குறளில் உள்ளதால் தமிழர்கள் வாசித்த முதல் இசைக்கருவி இது என நம்பப்படுகிறது.

யாழும் வீணையும்: சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக்கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால், பக்தி இலக்கிய காலத்தில் யாழும் அதன்படி வளர்ச்சியான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ‘ஏழிசை யாழ்', 'வீணை முரலக்கண்டேன்', 'பண்ணோடியைந்த வீணை பயின்றார் போற்றி' என்ற மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன.

இன்றைய நவீன காலத்தில் யாழ் பயன்படுத்தப்படுவதில் குறைவிருப்பினும் இதன் வரலாறு மற்றும் இசைக்கலை ஆர்வலர்களிடையே இன்னும் பெருமையும், மதிப்பும் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com