வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?

Do you know the history of voting machine?
Do you know the history of voting machine?

நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் (EVM) கடந்த 1998ல் பரவலாக நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தியாவில் 1982ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவும் குழப்பத்தில் முடிந்த சுவாரஸ்யத் தகவல் உங்களுக்குத் தெரியுமா?

1982ம் ஆண்டு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 50 வாக்குப்பதிவு மையங்களில் மட்டுமே மின்னணு வாக்கு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முதலாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் இங்குதான் பயன்படுத்தப்பட்டன. ஆனால், வாக்கு இயந்திரங்கள் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தேர்தலிலேயே குழப்பம் ஏற்பட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தேறியது.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஏ.சி.ஜோஸும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.சிவன் பிள்ளையும் போட்டியிட்டனர். இருவருக்கும் கடும் நெருக்கடியான போட்டி இருந்தது. இதில் 123 வாக்குகள் வித்தியாசத்தில் சிவன் பிள்ளை வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தேர்தல் வெற்றியில் நம்பிக்கையில்லாத ஏ.சி.ஜோஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், ‘தேர்தல் விதிகள் 1961ன்படி, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இவிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்தார். ஆனால், ஜோஸின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜோஸ் மேல்முறையீடு செய்தார். ஜோஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1984ம் ஆண்டு இவிஎம் பயன்படுத்தப்பட்ட 50 வாக்கு மையங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் வாக்குச்சீட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. 50 வாக்கு மையங்களுக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட மறு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.ஜோஸ் வெற்றி பெற்றார்.

ஒப்புகைச் சீட்டு மெஷின்
ஒப்புகைச் சீட்டு மெஷின்

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் விதிகள் 1961ன் படியும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய முறையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது’ எனத் தெரிவித்தது.

இதையும் படியுங்கள்:
'காஜி நேமு' என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
Do you know the history of voting machine?

இதையடுத்து, கடந்த 1992ல் நாடாளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு புதிதாகப் பிரிவு 61ஏ சேர்க்கப்பட்டது. இதன்படி கடந்த 1998ம் ஆண்டு முதல் பரவலாக நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

இப்போது புதிய முறையாக, வாக்கு அளித்தபின் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் வசதியாக ஒப்புகைச் சீட்டு நடைமுறையும் வந்துள்ளது. அந்தச் சீட்டில் வாக்காளர் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தார், அவரின் சீரியல் எண், வேட்பாளர் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அந்தச் சீட்டை வாக்காளர் ஆய்வு செய்தபின், அருகே இருக்கும் பெட்டியில் போட்டுவிட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com