‘டம்பப்பை’ எனப்படும் பெண்களின் கைப்பையின் (Hand bag) வரலாறு தெரியுமா?

Hand bag
டம்பப்பைhttps://swirlster.ndtv.com

ழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் பெண்கள் உபயோகிக்கும் கைப்பைகளை ‘டம்பப்பை’ என்று சொல்வதை கவனித்திருப்போம். டம்பம் அதாவது டாம்பீகமான, ஆடம்பரமான என இதற்குப் பொருள்படும். எதனால் இவற்றிற்கு இந்த பெயர் வந்தது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டில் ராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தில் பலவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், நீராவி எஞ்சின், ரயில் தண்டவாளங்கள் அமைத்தல் போன்றவை நடந்தேறின. மேலும், பல்வேறு நாகரிகமும் தழைத்தோங்கியது. பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினர். அதிகமாக பயணத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களுக்காகவே பயணத்திற்கு ஏதுவாக எடுத்துச் செல்லும் வகையில் வேனிட்டி (vanity) கேஸ்கள் என்று அழைக்கப்படும் கொள்கலன்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றில் ஷேவிங் கிரீம், சீப்புகள், கை நகங்களை அழகுப்படுத்தும் கருவிகள் போன்றவற்றை வைத்து ஆண்கள் பயன்படுத்தி வந்தனர்.

அதேபோல், நவநாகரிகமாக உடை அணிந்து இங்கிலாந்து பெண்களும் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அப்போது அவர்கள் தங்களுடைய மேக்கப் சம்பந்தப்பட்ட பொருட்களை வைப்பதற்கு வேனிட்டி பைகள் தேவைப்பட்டன. பெண்களுக்காகவே பிரத்யேகமாக பைகள் அழகாக வடிவமைக்கப்பட்டு அவை விற்பனையாகின.

மிகவும் வசதியான வீட்டுப் பெண்கள் முத்துக்கள், ஆமை ஓடு, ஜேடு மற்றும் விலை உயர்ந்த கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வேனிட்டி  பைகளை உபயோகிக்க தொடங்கினர். இவற்றில் ஒப்பனைப் பொருள்களான சிறிய கண்ணாடிகள், சீப்புகள், உதட்டுச்சாயம் கண் மை, ரூஜ், பவுடர் போன்றவற்றை வைத்திருந்தனர். அவை ஆடம்பரமான பை என்பதனால் அதை வேனிட்டி பை என்று அழைத்தனர். இதற்கு டாம்பீகமான அல்லது டம்பம் என்று தமிழில் பொருள்படும்.

இதையும் படியுங்கள்:
குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் உண்டாகும் 7 நன்மைகள் தெரியுமா?
Hand bag

நடுத்தர வசதி உள்ள பெண்களுக்கு ஏற்றவாறு, முத்து, பவளம் போன்ற ஆடம்பரக் கற்கள் இன்றி நல்ல தரமான தோலில் டம்பப்பைகள் வடிவமைக்கப்பட்டன. அவற்றில் தங்களை அலங்காரப் படுத்திக்கொள்ள ஏதுவான சாதனங்களை பைகளில் வைத்திருந்ததால் அதன் காரணமாகவும் அவை டம்பப்பைகள் என்று அழைக்கப்பட்டன.

பின்பு பரவலாக எல்லா நாடுகளிலும் பெண்கள், ‘வேனிட்டி பேக்’ எனப்படும் டம்பப்பைகளை உபயோகிக்க ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்களும் பெண்களுக்கு ஏற்ற வகையில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன, கண்களைக் கவரும் விதத்தில் பைகளை வடிவமைக்கத் தொடங்கினர். இதை கையோடு எடுத்துச் செல்ல  அடக்கமாகவும் வசதியாகவும் இருப்பதால் கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே இந்தப் பைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர்.  இப்போதும் கூட கைப்பைகள் பெண்களின் தனித்த அடையாளமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com