தஞ்சாவூர் என்றதுமே பிரகதீஸ்வரர் கோயில்தான் முதலில் நினைவுக்கு வரும். அதற்கடுத்து நினைவுக்கு வருவது அக்கோயிலை ஒட்டி உள்ள கடைகளில் விற்கப்படும் தலையாட்டி பொம்மைகள்தான். பார்ப்பதற்கு அழகாகவும், விதவிதமாகவும் இருக்கும் இந்த தலையாட்டி பொம்மைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவை தஞ்சை கைவினைக் கலைஞர்களால் காவிரி ஆற்று களி மண்ணை கொண்டு செய்யப்படுவதாகும். ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை பற்றி எடுத்துரைக்கும் முன்னரே தஞ்சாவூரில் இந்த சாய்ந்தாடும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூரின் அடையாளமாக இருக்கும் இந்த பொம்மைகள், நமது கலை மற்றும் பாரம்பரியத்தை உலகுக்கே பறைசாற்றக்கூடியதாகும். 2008 செம்டம்பர் மாதம் இந்திய அரசால் தஞ்சாவூர் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
முற்காலத்தில் இந்த பொம்மைகளை காவிரியில் இருந்து எடுக்கப்படும் களி மண் கொண்டு செய்தனர். ஆனால், தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ், மரத்தூள், காகிதக்கூழ் போன்றவற்றை வைத்து தயார் செய்கிறார்கள்.
சர் ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டை 1665 - 1666ல் வெளியிட்டார். 16ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் ஆளப்பட்டது. எனவே, அதற்கு முன்பே புவியீர்ப்பு விசையை பற்றி அறிந்த தமிழர்கள் தலையாட்டி பொம்மையை செய்தனர் என, ‘தி தஞ்சாவூர் டால்’ என்ற நூலில் சஞ்சய் காந்தி குறிப்பிடுகிறார். சரபோஜி மகாராஜா காலத்தில் இந்த பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் மதிப்புடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற அமைப்பே முதலில் செய்யப்படுகிறது. கிண்ணம் போன்ற அமைப்பில் தூய களிமண் நிரப்பி இரண்டு நாட்கள் நிழலிலும் இரண்டு நாட்கள் வெயிலிலும் உலர வைக்கப்படுகின்றன. உலர வைப்பதற்கு ஏற்ப பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன. பின்பு மேல்பாகம் தயாரித்து அடி பாகத்துடன் இணைக்கப்படுகின்றது. பிறகு உப்பு தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
தஞ்சாவூர் பொம்மைகளின் சாய்ந்தாடும் தன்மை தனித்துவமானது. இந்த பொம்மைகள் அடிப்பகுதி எடை மிகுந்ததாகவும் மேல்பகுதி எடை குறைவாகவும் இருக்கும். இதனால் இந்த பொம்மையை சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் செங்குத்தாக எழுந்து நிற்கும். புவியீர்ப்பு விசை செயல்பாட்டிற்கு ஏற்ப செங்குத்தாக எழுந்து நிற்பது போல இவை அமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டர் ஆர் பாரிஸ் நன்றாக அரைக்கப்பட்டு அத்துடன் தேவையான அளவு காகிதகூழ், கிழங்கு மாவு 1:3 என்ற அளவில் கலக்கப்படுகிறது. மாவை பூரி போல தேய்த்து அதை அச்சில் வைக்கின்றனர். சிலையை அச்சிலிருந்து எடுத்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி காகிதங்களை அதனுள் ஒட்டி உறுதி செய்கின்றனர். உடல் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட்டு ஒரு கம்பியில் பொருத்தி ஆடும்படி செய்யப்படுகிறது. ஆடும் மாது, பாட்டி, தாத்தா பொம்மைகள் இதுபோல் செய்யப்படுகின்றன. தற்போது பிளாஸ்டிக்கிலும் தலையாட்டி பொம்மைகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படித் தள்ளி விட்டாலும் திரும்ப எழுந்து கொள்ளும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைச் சொல்வார்கள். இது நமது பாரம்பரியக் கலையின் சான்றாக மட்டுமில்லாமல், சோர்வுற்றவர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய தத்துவத்தையும் தன்னுள் தாங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.