தந்தையர் தினத்துக்கு வித்திட்ட ஒரு பெண்ணின் கதை தெரியுமா?

தந்தையர் தினம்
father's day

ருடந்தோறும் தந்தையர் தினம், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. தந்தையர் தினம் வாஷிங்டனின் ஸ்போகேன் நகரைச் சேர்ந்த சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண்மணியின் விடாமுயற்சியால் தற்போது உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

மே மாதம் 1909ம் வருடம், தேவாலயத்தில் நடைபெற்ற, அன்னையர் தினத்தில் பங்கேற்ற சோனோரா, தாயை இழந்த குழந்தைகளை மறுமணம் செய்து கொள்ளாமல், வளர்த்த தந்தை, வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அவர்களை நினைவு கூர்ந்தார். தன்னுடைய தந்தையைப் போலவே நிறைய தந்தையர் ஒற்றை பெற்றோராக தன்னுடைய குழந்தைகளை பராமரித்து வந்திருப்பார்கள். அவர்களுடைய தியாகத்தை, நினைவில்கொள்ளும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று நினைத்தார்.

ஜூன் 6, 1910 அன்று சோனோரா, ஸ்போகேன் மந்திரிகள் சங்கம் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கிறிஸ்துவ சங்கம் ஆகியவற்றை அணுகி, தந்தையர் தினம் கொண்டாடுவதற்கான யோசனையை முன்வைத்தார். அதற்கு பலத்த வரவேற்பு இருந்ததால் 1910, ஜூன் 19, ஞாயிற்றுக்கிழமை முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டது. 1916ம் வருடம், ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் தந்தையர் தினம் கொண்டாடினார். இந்த நாளை தேசிய விடுமுறையாக மாற்ற விரும்பினார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அதை எதிர்த்தனர்.

தந்தையர் தினம் கொண்டாடுவதன் மூலம், அன்னையர் தினத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விடும் என்று வாதித்தனர். சோனோரா எடுத்துக் கொண்ட முயற்சி, பல தடைகளைச் சந்திக்க நேர்ந்தது. 1930ம் ஆண்டு அன்னையர் தினம், மற்றும் தந்தையர் தினம் இரண்டையும் இணைத்து ஒரே விடுமுறையாக, ‘பெற்றோர் தினமாக’ கொண்டாடலாம் என்று கருத்து தெரிவித்தனர் பலர். 1938வது ஆண்டு வரை தந்தையர் தினம் விடுமுறைக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது.

காங்கிரஸ் எதிர்ப்பிற்கு எதிராக மார்கரெட் சேஸ் ஸ்மித் என்ற செனட்டர், ‘நாங்கள் தாய், தந்தை இருவரையும் மதிக்கிறோம். ஆகவே, ஒருவரை கௌரவிப்பதை தவிர்ப்போம். இரு பெற்றோர்களில், ஒருவரை தனிமைப்படுத்தி, மற்றவரைப் புறக்கணிப்பது மோசமான அவமானம்’ என்றார். சோனோராவின் முயற்சிக்கு 56 வருடங்கள் கழித்து, 1966ம் வருடம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் என்று லிண்டன் ஜான்சன் அறிவித்தார். ஆனால், இதற்கான அதிகாரபூர்வ பிரகடனத்தில் ரிச்சர்ட் நிக்சன் 1972ம் வருடம் கையெழுத்திட்டு, ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம், அன்று விடுமுறை என்று அறிவித்தார். தந்தையர் தினம் கொண்டாட்டத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைப்பதற்கு 62 வருடங்கள் தேவைப்பட்டது.

1978ம் வருடம் தன்னுடைய 96வது வயதில் சோனோரா இயற்கை எய்தினார். சோனோரா ஒரு திறமையான கலைஞர், கவிஞர், குழந்தைகள் புத்தக ஆசிரியர், இறுதி ஊர்வல அமைப்பின் இயக்குநர். மேலும், ஸ்போகேனில் உள்ள மக்கள் நல அமைப்புகள் பலவற்றின் நிறுவன உறுப்பினர்.

Sonora Louise Smart Tote
சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டோட்

சோனாரோவின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் பற்றிய சிறுகுறிப்பு: இருமுறை மணம் செய்து கொண்டு, இரு முறையும் மனைவியை இழந்த வில்லியம் 14 குழந்தைகளின் தந்தை. 1842ம் வருடம் பிறந்த வில்லியம், அமெரிக்காவின் உள்நாட்டுப் போரில் சிப்பாயாகப் பணி புரிந்தார். இந்த உள்நாட்டுப் போர், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடையே நடந்தது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்கு 'மொபைல் வைரஸ்' உள்ளதா? நீங்கள்தான் காரணம்!
தந்தையர் தினம்

கூட்டமைப்பில் கலந்து சண்டையிட்டபோது, ஐக்கிய அமெரிக்கப் படையால் சிறை பிடிக்கப்பட்டார். சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க ஐக்கிய அமெரிக்கப் படையில் சேர்ந்து போரில் கலந்து கொண்டார். அவருடைய 56வது வயதில் மனைவி இறந்த பின்னால், குழந்தைகளை பராமரித்து வந்தார். மனைவி இறந்தபோது, மூத்த குழந்தை சோனாராவின் வயது 16, கடைசி குழந்தை வயது 7. 1919ம் வருடம் வில்லியம் இறந்தார்.

ஒரு பெண்ணின் விடாமுயற்சி, உலகெங்கும் அனுசரிக்கும் தந்தையர் தினத்திற்கு வித்திட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com