child mobile addiction
child mobile addiction

உங்கள் குழந்தைக்கு 'மொபைல் வைரஸ்' உள்ளதா? நீங்கள்தான் காரணம்!

தலைப்பை பார்த்ததும், மொபைல் வைரஸ் என்றால் என்ன? என்பது தான் அனைவர் மனதிலும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கும் அல்லவா? சொல்கிறேன். Mobile Addiction என்பதைத்தான் இன்று ஒரு நோயாக பார்க்க வேண்டி இருக்கிறது. அதைத்தான் Mobile Virus என்று குறிப்பிட்டேன்.

முன்பெல்லாம் குழந்தைகள் வெளியில் சென்று நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடுவது, நிலவை பார்த்து சாப்பிடுவது, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தாத்தா பாட்டியுடன் தன் மழலை மொழியில் கொஞ்சுவது என மகிழ்ச்சிகரமாக இருக்கும் அந்த வாழ்க்கை. பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சொல்லி தருவார்கள்.

ஆனால் இந்த காலமோ அதற்கு மாறாக உள்ளதே! குழந்தைகளிடம் கேட்டு எதை வேண்டுமானாலும் தெரிந்துக் கொள்ளலாம். பிறந்து ஒரு வயது முடிவடையும் முன்பே நடக்க தெரியுமோ இல்லையோ மொபைலில் அனைத்தும் தெரிந்துக் கொள்கின்றனர். மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குழந்தைகளிடம் கேட்டால் அவ்வளவு அருமையாக சொல்லி தருகிறார்கள். பெரியவர்களுக்கு தெரியாதவை கூட குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கின்றனர். 

மொபைல் போன் இருந்தால் தான் சாப்பிடுவார்களாம். விடுமுறை நாட்களில் அவர்களிடம் இருந்து மொபைல் போனை வாங்குவது பெற்றோர்களுக்கு பெரிய பாடாக இருக்கிறது. எந்த நேரமும் மொபைல் சாதனத்திலே மூழ்கி விடுகின்றனர். அவர்கள் கேட்டபடி மொபைல் சாதனத்தை கொடுக்கவில்லை என்றால் அதற்கான கோபம் பல மடங்காக இருக்கும். அடம்பிடித்து, அழுது மொபைல் போனை எப்படியாவது பெற்றோர்களிடம் இருந்து வாங்கிவிடுகின்றனர். இறுதியில் பெற்றோர்கள் தோற்று புலம்புகின்றனர்.

பொதுவாகவே குழந்தைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்று தான் மொபைல் போன்களை குழந்தைகளின் கையில்  கொடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஆரம்பத்தில் காட்டும் தயவு குழந்தைகளின் எதிர்காலத்தை பெரிதாக பாதிக்க நேரிடும். காலப்போக்கில் குழந்தைகள் அதற்கு அடிமையாகி விடக்கூடும்.

இவ்வாறு எந்த நேரமும் மொபைல் போனை பார்த்துக்கொண்டிருப்பதால், அவர்கள் தூங்கும் போது கூட மொபைல் பயன்படுத்துவது போல் தங்கள் கைகளை அசைகின்றனர். தூக்கத்தில் அதே சிந்தனையில் இருந்து புலம்புகின்றனர். இன்னும் சில குழந்தைகள் இரவு நேரங்களில் தூக்கம்  இல்லாமல் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலையும் பெரிதாக பாதிக்க படுகிறது. இந்த நிலைமை தற்போது பல குடும்பங்களில் நிலவி வருகிறது. இதனை சரி செய்ய தெரியாமல் பல பெற்றோர்கள் முயற்சி செய்து தோல்வியை சந்திக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பள்ளி குழந்தைகளுக்கு Lunch Bag Items எப்படி வாங்குவது தெரியுமா?
child mobile addiction

என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் இந்த விசயங்களில் தங்கள் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பது மிக அவசியம். ஆரம்பத்திலே தங்கள் குழந்தைகளுக்கு எது நல்லது எது கேட்டது என்று தெரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

குழந்தைகள் சிறுவயதில் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களை பார்த்துதான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்கள் முன்னிலையில் பெற்றோர் மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். அதிகமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவது, அதிலும் சிலர் தங்கள் குழந்தை என்ன செய்கிறது என்று கூட பார்க்காமல் மொபைலில் மூழ்கி இருப்பார்கள். இது நியாயமே கிடையாது அல்லவா ?

உங்கள் குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை என்று மொபைல் போனை கொடுத்து உணவு சாப்பிட வைப்பத்தைதை முதலில் தவிர்த்து விடுங்கள். அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுங்கள்.

வீட்டிற்குளே குழந்தைகளை வைத்திருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். வெளியில் சென்று அவர்களுக்கு விளையாட்டுகளை கற்றுக் கொடுத்து விளையாட வைத்தது சாதம் ஊட்டுங்கள்.

அவர்கள் அடம்பிடிக்கும் போது அவர்களை அதட்டுவதோ, அடிப்பதோ தவிர்த்து விடுங்கள். மாறாக அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.

மொபைல் போனை அவர்களிடம் கொடுப்பதை விட்டு, விளையாட்டுப் பொருட்களை கொடுங்கள். புதிதாக பல விளையாட்டுகளை உருவாக்கி  அவர்களோடு சேர்ந்து நீங்களும் விளையாடுங்கள். அது உங்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவியாக இருக்கும்.

முக்கியமாக அவர்களின் முன்பு மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். 'என்ன செய்தாலும் என் குழந்தையை அதிலிருந்து மீட்பது கடினம்' என்று எதையும் முயற்சிக்காமலே கூறி விடாதீர்கள். அப்படி புலம்பாமல், முதலில் பெற்றோராகிய நீங்கள் முயற்சி செய்து காட்டுங்கள்.

As Parents, Set An Example First.

logo
Kalki Online
kalkionline.com