தென்னிந்தியாவின் புகழ் பெற்ற உணவு வகைகளில் ஒன்று காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி உருவானதற்கு பின்னே இருக்கும் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்தான் பெருமாளுக்கு இந்த இட்லி நெய்வைத்தியமாகப் படைக்கப்படுகிறது. மேலும், முதன்முதலில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் வல்லபாச்சாரியார்தான் காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு மிளகு, சீரகம், நெய், சுக்கு சேர்த்து அருமையான இட்லி தயாரித்து மந்தாரை இலையில் பெருமாளுக்கு நிவேதனமாகப் படைத்தார். அன்றிலிருந்து காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு இந்த இட்லியே பிரதானமாக நெய்வைத்தியம் செய்யப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இந்த இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த இட்லியை ‘கோயில் இட்லி’ என்றும் அழைக்கிறார்கள். இந்த காஞ்சிபுரம் இட்லியை நீளமான மூங்கில் குடுவை மற்றும் மந்தாரை இலையைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், வழக்கமான இட்லியில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. இட்லி செய்வதற்கு அரிசி, உளுந்து, மிளகு, பெருங்காயம், சீரகம், இஞ்சி, நெய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பாரம்பரிய முறையில் மூன்று மணி நேரம் வேக வைத்து எடுக்கிறார்கள்.
இந்த இட்லி நாளடைவில் பிரசாதமாக வழங்கப்படுவது மட்டுமில்லாமல் மக்களுக்கும் பிடித்த உணவு வகையாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இந்த இட்லியை பெறுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தி செய்யப்படும் இட்லி மாவு புளித்த பிறகு அதில் புரோபையாடிக் இருப்பதால், செரிமானத்திற்கு நல்லதாகும். மந்தாரை இலையை பயன்படுத்தி இட்லி செய்வதால், ஊட்டச்சத்துக்கள் இழக்காமல் இருக்க உதவுகிறது. மிளகு, இஞ்சி, வெந்தயம் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொண்டவை. தயிர் வயிற்றுக்கு நல்லதாகும்.
இதன் சுவை பிடித்துப் போனதால் தற்போது காஞ்சிபுரம் இட்லியை பெரிய ஹோட்டல்களிலும் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். சிலர் இந்த இட்லி பல்லவர் காலத்தில் உருவானது என்றும் சொல்கிறார்கள். எப்படி இருந்தால் என்ன? நமக்கு சுவையான இட்லி கிடைத்ததே. அந்த வகையில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.