கத்திரிக்கோல் வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இந்தப் பொருள் இல்லாமல் இருக்காது. ஏனென்றால், நம் அன்றாட வாழ்க்கைக்கு மிக மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று கத்திரிக்கோல். பல வகையான கத்திரிக்கோல்கள் உள்ளன அதேபோல், வெறும் பத்து ரூபாயில் இருந்து தொடங்கி ஆயிரத்திற்கும் மேல் ரூபாய் மதிப்புள்ள கத்திரிக்கோள்கள் கிடைக்கின்றன.
கத்திரிக்கோல் இல்லாத இடம் எது என்று கேட்டால் அவ்வளவு சீக்கிரம் யாராலும் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், கோயில் முதல் சமையலறை வரை எல்லா இடங்களிலும் எங்காவது ஒரு மூலையில் நிச்சயம் கத்திரிக்கோல் இருக்கும். அதேபோல், கத்திரிக்கோல் கிடைக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு பதற்றமாகி விடுவோம். எந்த ஒரு பொருளையும் கட் பண்ணுவதற்கு கத்திரிக்கோல் எவ்வளவு அவசியம். இந்த கத்திரிக்கோல் உருவான கதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வெண்கல கத்திரிக்கோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை திருகுச் சுருள் வில் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆட்டு ரோமங்களை மழித்து எடுக்கவே இத்தகைய கத்தரிக்கோல்களைப் பயன்படுத்தினர்.
தற்போது நாம் பயன்படுத்தும் கத்திரிக்கோல்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ரோமானியர்கள் இத்தகைய கத்தரிக்கோல்களை உருவாக்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அவர்கள் கைப்பிடிக்கும், வெட்டும் பிளேடுகளுக்கும் நடுவில் இணைப்பு கொண்ட கத்திரிக்கோல்களை உருவாக்கி பயன்படுத்தினர்.
16ம் நூற்றாண்டிலிருந்துதான் வீடுகள் தோறும் கத்திரிக்கோல்கள் பயன்படுத்தும் வழக்கம் வந்தது. உறுதியான பொருட்களை வெட்டுவதற்கான கத்திரியை உருவாக்கியவர் ராபர்ட் ஹஞ்ச்லிபி ஆவார். 1761ல் இவர் ‘பிரிசிசன்’ எனப்படும் முந்து கத்தரிக்கோல்களை உருவாக்கி விற்பனைக்கு விட்டார்.
துருப்பிடிக்காத உருக்கு உலோகம் மூலம் மருத்துவ அறுவைச் சிகிச்சைக்கான கத்திரிக்கோல்களும் தயாரிக்கப்படுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் கத்தரிக்கோல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.