கிணறு வெட்ட முன்னோர்கள் பயன்படுத்திய டெக்னிக் என்ன தெரியுமா?

Dig a Well
Dig a Well
Published on

கிணறு வெட்டுவதற்கு நம் முன்னோர்கள் கடைபிடித்த தொழில்நுட்பம் கூட இயற்கை விவசாயத்தோடு தொடர்புடையது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! ஆம், கிணறு வெட்டும் இடத்தை மாடுகள் மற்றும் எறும்புகளின் உதவியால் கண்டறிந்தனர். இப்படிப்பட்ட பண்டைய தொழில்நுட்பத்தை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா! வாருங்கள் இப்போதே தெரிந்து கொள்வோம்.

தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ள இன்றைய காலத்தில், நகரங்களில் கிணறுகளை காண்பதே அரிதாகி விட்டது. கிராமங்களில் கூட பல கிணறுகள் மூடப்பட்டு விட்டன. முன்பிருந்த கிணறுகளில் பாதியளவு கூட இப்போது இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நாம் பண்டைய நாகரிகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறோம். பல கிணறுகள் தூர்வாரப்படாமல் பயனற்று கிடக்கின்றன. இன்றைய சூழலில் புதிதாய் கிணறு வெட்டுவது கூட சவாலான விஷயம் தான். அப்படி இருக்கையில், நம் முன்னோர்கள் எப்படி பல கிணறுகளை வெட்டி பயன்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

கிணறு ஒன்றை தோண்டி தண்ணீர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. பலருடைய உழைப்பு இதற்குத் தேவைப்படுகிறது. நாம் தோண்டிய கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது கோடையில் தண்ணீர் வறண்டு விட்டாலோ, நம் உழைப்பும் நேரமும் வீணாகி விடும்.

பண்டைய தொழில்நுட்பம்:

கிணறு வெட்ட ஒரு மனையில் பச்சைப் புற்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தை கிணறு வெட்டத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இடத்தில் குறைவான ஆழத்திலேயே நீருற்று தோன்றி விடுமாம். இருப்பினும் அது நல்ல நீருற்றா என்பதை அறிந்து கொள்ள நவதானியங்கள் உதவுகிறது. நவதானியங்களை நன்றாக அரைத்து, கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் இரவு தூவி விட வேண்டும். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தால், எறும்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த நவதானியங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து வைக்கும். உற்று கவனித்தால் இதற்கான தடயங்கள் தெரியும். இந்த இடத்தில் கிணறு வெட்டினால் நன்னீர் கிடைக்குமாம்.

இதையும் படியுங்கள்:
சைக்கிளை ஏர்க்கலப்பையாக மாற்றிய புதுமை விவசாயி ரமேஷ்!
Dig a Well

நன்னீர் கிடைத்து விட்டது என்று அதோடு இருந்து விடக் கூடாது. கோடையில் வற்றாத நீருற்று கிடைக்குமா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு விவசாயிகளின் உற்ற நண்பனான மாடுகள் உதவுகிறது. கிணறு வெட்ட இருக்கும் இடத்தினை நாற்புறமும் அடைத்து விட்டு, நன்றாக பால் கறக்கும் பசு மாடுகளை நிலத்திற்குள் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேய விட வேண்டும். இந்த நாட்களில் நாம் பசுக்களை உன்னிப்பாக கவனித்தால், அவை தொடர்ந்து ஒரே இடத்தில் படுப்பதை பார்க்க முடியும். இந்த இடத்தில் கிணறு வெட்டினால் என்றுமே வற்றாத நீருற்று கிடைக்குமாம்.

நம் முன்னோர்களின் அறிவுத் திறனையும், அதனைப் பயன்படுத்தும் விதத்தையும் பார்க்கையில் உண்மையில் மெய் சிலிர்க்கிறது. கிணறு மட்டுமல்ல அன்றைய காலங்களில் அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு தொழில்நுட்பமும் நிச்சயமாக நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com