சைக்கிளை ஏர்க்கலப்பையாக மாற்றிய புதுமை விவசாயி ரமேஷ்!

Farmer Ramesh with Bicycle Er kalappai
Farmer Ramesh with Bicycle Er kalappai
Published on

தமிழ்நாட்டில் உழவுத் தொழிலில் தொன்றுதொட்டு ஈடுபட்டு வரும் விவசாயிகள் பலர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் விவசாய உபகரணங்களில் மிகவும் முக்கியமானது ஏர்க்கலப்பை. மாடுகளை பூட்டி ஏர் உழுத காலம் தற்போது மாறிக்கொண்டு வருகிறது.

மாடுகளின் இடத்தை டிராக்டர்கள் பிடித்துள்ள நிலையில், டிராக்டர் வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தால் மிதிவண்டியை ஏர்க்கலப்பையாக மாற்றி, விவசாயத்தில் புதுமையை ஊட்டி செலவுகளை குறைத்து வருகிறார் திருவள்ளூர் மாவட்டம் தலையாரிபாளையம் மேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ். அவரை கல்கியின் சார்பாக சந்தித்து பேசுகையில் தனது விவசாய அனுபவங்களையும், ஏர்கலப்பை உருவாக்கிய நிகழ்வையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார் இந்தப் புதுமை விவசாயி.

"நான் பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சிறு வயதிலிருந்தே விவசாயம் செய்து வருகிறேன். நெல், எள், வேர்க்கடலை மற்றும் கீரை என பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்வேன். இதில் வேர்க்கடலையில் ஓரளவுக்கு இலாபம் கிடைக்கும். இருப்பினும் விலையை என்னால் நிர்ணயம் செய்ய முடியாதல்லவா! நானும் விவசாயி தானே, வியாபாரி இல்லையே. தொடக்கத்தில் விவசாயம் செய்யும் போது ஒரே ஒரு கிணறு மட்டும் இருந்தது. அதைப் பயன்படுத்தி தான் பயிர்களுக்கு நீர்ப் பாய்ச்சுவேன். சில சமயங்களில் வானம் பார்த்த பூமியாக மழையையும் நம்பி விதை விதைப்பேன்.

பிறகு கிணறு வற்றியதால், அதனை மூடி புதைத்து விட்டு நிலத்தை சமன் செய்து விட்டேன். இப்போது பயிர்களுக்குத் தேவையான தண்ணீருக்கு போர் தான் பிரதான மூலதனம். இருப்பினும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கத் தான் செய்கிறது. விவசாயத்தில் எனது மனைவி சங்கீதாவும், எனது 3 மகள்களும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

விவசாயத்தில் இலாபம் குறைவு தான். ஆகும் செலவுகள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நிலத்தை உழுவதற்கு டிராக்டரை நாடினால், வாடகை செலவு கைமீறி விடுகிறது. உழுவதற்கு ஆகும் செலவைக் குறைக்கும் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த மிதிவண்டி ஏர்க்கலப்பை. கடையில் ஒரு பழைய மிதிவண்டியை விலைக்கு வாங்கி, அதன் முன்பக்க டயரை நீக்கி விட்டு அந்த இடத்தில் ஏர்க்கலப்பையை வெல்டிங் முறையில் பொருத்தி விட்டேன். இப்போது இந்த மிதிவண்டி ஏர்க்கலப்பை எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. கையிலேயே எடுத்துச் செல்வேன்; கையாள்வதற்கும் மிக எளிதாக இருக்கிறது. இதன்மூலம் நிலத்தை உழுதால் கூடுதல் நேரமாகும். மேலும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து உழுவதற்கு கடினமாக இருக்கும். இப்போது நிலத்தை உழுவதற்கான செலவு மிச்சமாகி விட்டது என்பதால் மனநிறைவாக இருக்கிறது.

Farmer Ramesh
Farmer Ramesh
இதையும் படியுங்கள்:
ஆட்டுப் பண்ணை பராமரிப்பு - சாதித்துக் காட்டிய சதீஷ்குமார்!
Farmer Ramesh with Bicycle Er kalappai

மிதிவண்டி ஏர்க்கலப்பையைப் பார்த்த அக்கம் பக்கத்து விவசாயிகளும், என்னிடம் இதனை வாங்கிச் சென்று ஏர் உழுகிறார்கள். இப்போது கீரை மற்றும் மிளகாய்ச் செடியைப் பயிரிட்டுள்ளேன். விவசாயம் மட்டுமல்லாது, கும்முடிபூண்டி சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியிலும் வேலை பார்த்து வருகிறேன். தினசரி காலையில் விரைவாக எழுந்து விவசாய வேலைகளைச் செய்வேன். மேலும் கிடைக்கும் நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் விவசாய வேலைகளைச் செய்து வருகிறேன்.

விவசாயத்தைப் புதிதாகப் பார்க்கும் இன்றைய தலைமுறையினருக்கு, மிதிவண்டியில் ஏர்க்கலப்பை புதுமையாகத் தெரியலாம். ஆனால் எல்லோரையும் போல அல்லாமல் தனித்துவமாக மாற்றி சிந்தித்தால் எதிலும் தீர்வு கிட்டும்."

மகிழ்ச்சியுடன் தனது விவசாய அனுபவங்களை எடுத்துரைத்தார் இந்தப் புதுமை விவசாயி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com