தற்காலத்தில் முகம் மற்றும் உடலை அழகுபடுத்திக் கொள்வதில் வயது வித்தியாசமின்றி பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மனிதரின் வெளிப்புற சருமத்தில் தங்கள் கலைத்திறமையைக் காட்டும் கலைஞர்கள் உலகெங்கும் உள்ளனர். தனித்தன்மை வாய்ந்த அந்தக் கலைஞர்களுக்கான தினமே இன்று அனுசரிக்கப்படும், ‘சர்வதேச முகம் மற்றும் உடல் கலை தினம்.’ உலகெங்கிலும் உள்ள முகம் மற்றும் உடல் கலைஞர்களின் சிறந்த கலைப் படைப்புகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச முகம் மற்றும் உடல் கலை தினம் பிப்ரவரி 1 அன்று கொண்டாடப்படுகிறது.
பச்சை குத்தும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மனிதர்கள் இதை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது சுமார் 5,200 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மம்மி எனப்படும் எகிப்திய சடலங்களிலும் பச்சை குத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நமது தமிழர் பண்பாட்டிலும் பச்சை குத்துதல் சிறப்பான இடம்பிடித்ததை சங்ககால நூல்களின் மூலம் அறியலாம்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் போர் கைதிகளை குறிக்க பச்சை குத்தப்பட்டதை கிரேக்க மற்றும் ரோமானிய பதிவுகள் வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தாங்கள் மேற்கொண்ட புனிதப் பயணத்தை நினைவுபடுத்தும் வகையில் ஜெருசலேம் சிலுவையுடன் பச்சை குத்தி கொண்டுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டன் கேப்டன் ஜேம்ஸ் குக் தெற்கு பசிபிக் பகுதியில் பயணம் மேற்கொண்டபோது அவரும் அவருடைய மாலுமிகளும் அங்கு உள்ள பழங்குடியின மக்களின் பச்சை குத்துதல் கலாசாரத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்து உலகம் முழுவதும் பாரம்பரியமாக பச்சை குத்தப்பட்டதை அறிய முடிகிறது.
முகம் மற்றும் உடல் ஓவியம், பச்சை குத்தல்கள் செயல்திறன் கலை மற்றும் ஸ்கார்ஃபிகேஷன் ஆகியவற்றைக் கௌரவிப்பதற்காக 2012ல் முகம் மற்றும் உடல் கலைஞரான கேட்டி மியாகி சர்வதேச முகம் மற்றும் உடல் கலை தினத்தை நிறுவினார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மார்ட்டின் ஹில்டெப்ராண்ட் என்பவர் 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் முதல் ஆவணப்படுத்தப்பட்ட தொழில்முறை பச்சைக் கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் இரு கட்சிகளின் வீரர்களுக்கும் பச்சை குத்தினார். நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஒரு பச்சைக் கலைஞர், சாமுவேல் ஓ'ரெய்லி, 1891ல் முதல் மின்சார டாட்டூ மெஷினுக்கு காப்புரிமை பெற்றார். அதன் பின் உலகெங்கும் பல கலைஞர்கள் டாட்டூவை முறைப்படி கற்று பரவலாக்கினர். ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்திலும் நடைமுறையில் உள்ள உடல் கலை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், பசிபிக் தீவுகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதைக் காணலாம்.
பச்சை குத்திய தனிநபராக லக்கி டயமண்ட் ரிச் என்பவர் தனது உடலில் நூறு சதவீதம் மை பூசப்பட்ட நிலையில், உலகிலேயே அதிகம் பச்சை குத்திய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸில் பாடி ஆர்ட் எக்ஸ்போ, பிரைட்டன் டாட்டூ கன்வென்ஷன், ஆஸ்திரேலிய பாடி ஆர்ட் ஃபெஸ்டிவல் மற்றும் அட்லாண்டிக் சிட்டி டாட்டூ எக்ஸ்போ உள்ளிட்ட பல உடல் கலை பற்றிய கண்காட்சிகளும், சர்வதேச நிகழ்வுகளும் உடல் கலைஞர்கள் மற்றும் அவர்களின் அசத்தலான படைப்புகளை கௌரவிக்கின்றன. இருப்பினும் சில காரணங்களால் ஈரான் போன்ற சில நாடுகளில் பச்சை குத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பெண்களே இந்தக் கலையை தங்கள் உடலில் வரைந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகச் சொல்கின்றனர். அமெரிக்காவில் பச்சை குத்தியவர்களில் 59 சதவிகிதம் பேர் பெண்கள் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பெரும்பாலும் இதயங்கள் மற்றும் தேவதைகளின் உருவங்களை டாட்டூ மற்றும் வர்ணங்களால் உடலில் வரைந்து கொள்வதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.