பல லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மர்மக்குழிகள் பழனி அருகே கண்டுபிடிப்பு!

Millions of years old mystery pits discovered near Palani
Millions of years old mystery pits discovered near Palani

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலசமுத்திரம் அருகே உள்ளது குரும்பப்பட்டி கிராமம். இங்கு அமைந்துள்ள மிகப் பழைமையான பவளக்கொடி அம்மன் கோயிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்வதற்காக கடந்த 2017ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி சென்றிருந்தார். அந்த நேரத்தில் கோயிலின் அருகிலிருந்த வயல்வெளியில் ஆங்காங்கே இருந்த பாறைகளின் மீது இருந்த வித்தியாசமான குழிகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார்.

மிகுந்த கவனத்துடன் அவற்றைச் சுத்தம் செய்து பார்த்தபோதுதான் அவை பழங்காலக் கல்லாங்குழிகள் எனத் தெரியவந்தது. இவற்றின் தொன்மை பற்றி விரிவாக அப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வேலி போட்டு பாதுகாக்கும்படி கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் Cupules என்றும், தமிழில் 'கல்லாங்குழிகள்' என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு (கடந்த ஜனவரி 23ம் தேதி) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளரான ரொமைன் சைமனல் (French anthropologist Romain Simenel) என்பவரை அழைத்து வந்து ஆய்வு செய்தபோதுதான் பல ஆச்சரியமான உண்மைகள் தெரிய வந்தன.

உலகம் முழுவதும் பழங்குடி மக்கள் கல்லாங்குழிகள் பற்றி ஆய்வு செய்து வரும் ரொமைன் சைமனல் இந்த கல்லாங்குழிகள் ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதை ஆய்வு மூலம் உறுதி செய்து இருக்கிறார்.

பழனியில் கண்டறியப்பட்டுள்ள இந்த கல்லாங்குழிகள், கீழ்த்தொல் பழங்கால கட்டத்தைச் சேர்ந்தவை. அதாவது, மனித இனத்துக்கு முந்தைய இனமான 'ஹோமோ எரக்டஸ்' இனம் உருவாக்கிய குழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவை சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். பழனியின் கல்லாங்குழிகள் உலகின் மூன்றாவது தொன்மையான கல்லாங்குழிகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

குரும்பப்பட்டி பவளக்கொடி அம்மன் கோயில் அருகே பாறைப்பகுதியில் சிறிய, நடுத்தர, பெரிய அளவிலான குழிகள் என மொத்தம் 191 குழிகள் உள்ளன. சிறிய குழிகள் 4 செ.மீ. விட்டமும், பெரிய குழிகள் 15 செ.மீ. விட்டமும்  உடையதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதே வகை குழிகள் இதற்கு முன்பு மத்தியப்பிரதேசத்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசத்தில் பீம்பேட்காவில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 7 லட்சம் ஆண்டுகள் பழைமையானவையாகவும், தென் ஆப்பிரிக்கா களஹாரி பாலைவனத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 4.10 லட்சம் ஆண்டுகள் பழைமையானவையாகவும் அறியப்பட்டவை.

தமிழகத்தில் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி உட்பட பல மாவட்டங்களில் இந்தக் கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் புதை குழிகளுக்கு அருகில் உருவாக்கப்பட்டிருப்பதால், இவை இறந்த முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்:
சிற்பியின் பெயரால் அழைக்கப்படும் கலைக்கோயில்!
Millions of years old mystery pits discovered near Palani

பழனி கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன் - புரட்டரோசோயிக் காலத்தை, அதாவது 58 கோடி முதல் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய பாறைகளால் ஆனவை. மேலும், இந்த உருமாறிய பாறைகளில் செதுக்கப்பட்ட கல்லாங்குழிகள் 4 லட்சம் ஆண்டுகள் பழைமையானவை என்பதால் மனித குலத்தின் பரிணாமம், இடப்பெயர்வு, தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கல்லாங்குழிகளின் ஆய்வு பெரும்பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கல்லாங்குழிகளை தொல் மனிதர்கள் ஏன்? எதற்காக உருவாக்கினர் என்பது இதுவரை கண்டறியப்படாத மர்மமாக உள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டாலும் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் நமக்கு மேலும் பல ஆச்சர்யங்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com