
நாம் பயன்படுத்தும் சில பிரபலமான பொருட்கள் 'புவிசார் குறியீடு பெற்றவை' என்று சொல்ல கேட்டிருப்போம். உதாரணத்திற்கு ஊட்டி வருக்கி, தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள் போன்ற பொருட்கள் புவீசார் குறியீடு பெற்றவை. இப்படி புவிசார் குறியீடு ஒரு பொருளுக்கு தருவதன் மூலமாக என்ன பயன்? புவிசார் குறியீடு என்றால் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
புவிசார் குறியீடு என்பது உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதாகும்.
மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2003 ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டார பகுதிகளில் உற்பத்தியாகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குவதே புவிசார் குறியீட்டு சட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற முதல் பொருள் டார்ஜிலிங் தேநீர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டு தான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்ற பொருள். மதுரை மல்லி, சேலம் மாம்பழம், பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியம் போன்றவை புவிசார் குறியீடு பெற்ற பொருட்களாகும். இந்தியாவில் இதுவரை 195 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றிருக்கின்றன. இதில் 57 பொருட்கள் விவசாயம், உணவு சார்ந்தவையாகும்.
புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் அந்த பொருட்களில் போலிகள் உருவாகாமல் தடுப்பதற்காகவேயாகும். குறிப்பிட்ட நிலப்பகுதியின் தயாரிப்புத்திறன் உலகளவில் ஊக்கப்படுத்தப்படுகிறது.
உதாரணத்திற்கு காஞ்சிபுரம் பட்டு புவிசார் குறியீடு பெற்ற பொருள். இந்த பொருளை காஞ்சிபுரம் தாண்டி அந்த பெயரை பயன்படுத்தி ஏமாற்றி விற்பனை செய்வதற்கு இந்த சட்டம் தடுக்கிறது. இதனால் குறிப்பிட்ட அந்தந்த ஊரின் உண்மையான தயாரிப்பு பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு கிடைத்த இடத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.