விலை உயர்ந்த பொருட்கள் என்றால், உடனே அனைவர் மனதிலும் வருவது தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள்தான். ஆனால், மனிதனின் சாதாரண பல் ஒன்று அதிக விலைக்கு விற்கப்பட்டதன் காரணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்க விஞ்ஞானிகளில் ஒருவரான சர்.ஐசக் நியூட்டன் அனைவரும் அறிந்த பிரபலமான விஞ்ஞானி ஆவார். இவர் 1726ம் ஆண்டில் காலமானார். இவர் புவியீர்ப்பு விதியைக் கண்டுபிடித்ததற்காகவும் உலகத்தினரால் புகழ் பெற்றவர்.
நியூட்டனின் உலகளாவிய ஈர்ப்பு விதியின் கண்டுபிடிப்பு 1666ம் ஆண்டில் வூல்ஸ்டோர்ப் மேனரில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள மரத்திலிருந்து ஆப்பிள் பழம் விழுந்ததற்குக் காரணமாக இருந்தது என்பதை அனைவரும் அறிவோம்.
பூமியின் புவி ஈர்ப்புத் தன்மையைப் பற்றி முதன் முதலில் கண்டறிந்தவர் நியூட்டன் என்றே பலர் எண்ணினாலும், அதற்கு முன்பாகவே, பலர் பூமியின் தன்மை இழுப்பதாலேயே பொருட்கள் கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.
இருப்பினும், கிரகங்களின் இயக்கத்துக்கு இந்த புவி ஈர்ப்பு விசையே காரணம் என்றும், கிரகங்கள் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரமுள்ளனவோ அவ்வளவுக்கு மாறாக வேகம் சலன கதியில் வித்தியாசப்படுகிறது என்றும் முதன் முதலாகக் கண்டறிந்தவர் ஐசக் நியூட்டனே. நியூட்டன் பற்றிய குறிப்புகளை அவரது நண்பர் வால்டோ எழுதி வைக்கவில்லையென்றால், நியூட்டனின் ஆப்பிள் பழச் சம்பவம் நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.
‘சிந்திப்பதில் பொறுமையும், செயலில் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். இதைத்தவிர எனக்கு வேறு எந்தச் சிந்தனையுமே கிடையாது' என்று குறிப்பிட்ட சர்.ஐசக் நியூட்டனுக்கு சொந்தமான பற்களில் ஒன்றுதான் 1816ம் ஆண்டு லண்டனில் 3633 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என அறியப்படுகிறது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
கணித சம்பந்தமான டெலஸ்கோப், பூமியின் புவி ஈர்ப்பு விசை, கோள்களைப் பற்றி, பூமியின் உருவம், கன அளவு போன்ற விதிகள், சூத்திரங்கள் என்று எல்லாவற்றையும் உலகிற்கு உணர்த்திய நியூட்டன், அறிவியல் உலகில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அவர் இறந்த பிறகும் அவரது பல் அதிக விலைக்கு விற்று அவர் எத்தகைய சாதனையாளர் என்பதை நமக்கு நினைவு கூறுகிறது.