அருகம்புல் சாறு பற்றி தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, நம்மில் பலருக்கு கோதுமை புல் சாறு பற்றி அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செயற்கை உணவுகளான ஐஸ்கிரீம், பிஸ்கட்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் கூட இந்த கோதுமைப்புல் சாறுகளுக்குக் கிடைப்பதில்லை. புதிதாக வெட்டப்பட்ட கோதுமைப் புல்லை நீரில் நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறெடுத்து சுத்தமான துணி அல்லது வடிகட்டியில் வடிகட்டி அப்படியே பருகலாம் அல்லது எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம். இதன் சாறை அப்படியே பச்சையாக உட்கொள்வது சிறந்தது.
இதில் வைட்டமின் பி, ஈ, கே, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பாக்டீரியா எதிர்ப்பு அயோடின், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவும் இது, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இது கல்லீரல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றுவதன் மூலம் கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. நீண்ட கால கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் மிக்கது. இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.
கோதுமையின் இளம் புற்களை எடுத்து புதிதாக சாறு செய்வது ஒரு எளிமையான பானமாகத் தோன்றினாலும், இதில் நிறைய வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், குளோரோபில் மற்றும் பிற நொதிகள் போன்ற பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் 17 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. பெருங்குடலையும் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இது நோய் தொற்றுக்கு எதிராக செயல்படும். பல் சிதைவை தடுக்க உதவும். புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கக்கூடிய சக்தி கொண்டது.
உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உதவும் கோதுமைப் புற்களை வீட்டிலேயே வளர்க்கலாம். இது சிறந்த நச்சு நீக்கியாகும். உடலில் உள்ள கழிவுகளையும், நச்சுத்தன்மையையும் அகற்றுவதுடன் ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. இதனை நாள்தோறும் பருகி வர உடலில் தேங்கும் கழிவுகள் வெளியேறி விடும். இதில் இருக்கும் என்சைம்கள் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. செரிமானப் பிரச்னைகளில் இருந்தும் நமக்கு நிவாரணம் அளிக்கிறது.
உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கொழுப்பு சத்து இல்லாத குறைவான கலோரிகள் கொண்ட கோதுமைப்புல் சாறை எடுத்துக் கொள்ளும்போது உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதயம் சார்ந்த பிரச்னைகள் வருவதில்லை. அத்துடன் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கோதுமைப்புல் சாறை எடுத்துக்கொள்வது நல்லது. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நம்மை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
இதில் இருக்கும் குளோரோபில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கின்றது. இதனை முதன் முதலில் எடுத்துக்கொள்ளும்போது குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் உடல் மாற்றங்களை பொறுத்து ஜூஸ் எடுத்துக் கொள்வதை அதிகப்படுத்தலாம். இந்த கோதுமைப்புல் ஜூஸ் ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு வயிற்று வலி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே, முதலில் குறைந்த அளவு எடுத்து, பிறகு சிறிது சிறிதாக அளவை உயர்த்திக்கொண்டே வரலாம்.