
மனிதர்கள் தொடர்பு கொள்ள உருவாக்கப்பட்டதுதான் மொழி. இது வரை எந்த மொழியும் எவ்வாறு தோன்றியது? என்பது எல்லாம் எவரும் கண்டறியப்பட வில்லை. மொழி ஒரு இனத்தின் அடையாளமாகவும் அதன் வேராகவும் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு விதமான மொழிகள் பேசப்படுகின்றன. சில நாடுகளில் மிகவும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எந்தெந்த நாட்டில் அதிக மொழிகள் பேசப்படுகின்றன என்பதை பற்றி இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியா: 839 மொழிகள்
உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடாக பப்புவா நியூ கினியத் தீவுகள் உள்ளது. இங்கு மட்டும் 839 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஆயினும் இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக இங்கிலீஷ் உள்ளது. அடுத்ததாக பப்புவா மொழியான கிரியோல் டோக் பிசின் மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த நாட்டில் ஏராளமான பழங்குடி இனக்குழுக்கள் உள்ளனர். இங்கு ஒவ்வொரு இனக்குழுவும் தனித்தனியாக மொழிகளை பேசுகின்றனர்.
நிறைய மொழிகள் இருந்தாலும் அதனுடன் கொண்ட தொடர்புகள் அடிப்படையில் இரு பெரும் பிரிவாக பிரித்துள்ளனர். அதில் ஒரு பிரிவு பப்புவன் மொழிகள் பெரும்பாலும் உள்ளூர் பழங்குடியின மக்கள் அதிகம் பேசுகின்றனர். நாட்டின் கடற்கரைப் பகுதியில் இன்னொரு பிரிவான ஆஸ்திரேலிய மொழிகளை பேசுகின்றனர். இவ்வளவு மொழிகள் இருந்தாலும் அதற்கு முறையான எழுத்து வடிவமும் இலக்கணமும் கிடையாது என்பதால், அந்த மொழிகள் சிறிது சிறிதாக அழியத்தொடங்கியுள்ளது.
இந்தோனேசியா: 718 மொழிகள்
மக்கள் தொகையில் சற்று பெரிய நாடாக இருக்கும் இந்தோனேஷியாவில் 718 மொழிகள் பேசப்படுகின்றன. மொழிகளை பேச பப்புவா நியூ கினியாவில் இருப்பதைபோல தனித்தனி பழங்குடியினம் இங்கு கிடையாது. ஆயினும் 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட நாட்டில் தீவுக் கூட்டங்களுக்கு ஏற்ப மொழிகள் பிரிகின்றன. அதிக மொழிகள் பேசும் அடிப்படையில் உலகில் இரண்டாவது நாடாக உள்ளது. நாடு முழுக்க பரவலாக பாஹாஷா இந்தோனேசியா மொழி பேசப்படுகிறது. இது மலாய் மொழிப் பிரிவில் வரும். அதே நேரத்தில் இதில் சமஸ்கிருத மொழியின் தாக்கமும் இருக்கும்.
நைஜீரியா: 538 மொழிகள்
அதிக மொழிகள் பேசுவதில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா 3 வது இடத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவில் ஏராளமான தனித்தனி பழங்குடி இனக் குழுக்கள் இருப்பதால், அவர்களின் மொழியிலும் தனித்துவம் மிகுந்து உள்ளது. 538 மொழிகளை இனக்கூட்ட ரீதியாக இங்கு மக்கள் பேசுகின்றனர்.
முக்கிய பூர்வீக மொழிகளாக ஹவுசா, யோருபா மற்றும் இக்போ ஆகியவை உள்ளன. இந்த மொழிகள் யாவும் பூர்வீக மொழிகளாவே இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் அருகில் உள்ள இன்னொரு இனக் கூட்ட மொழிக்கும் தொடர்புகள் உள்ளன. இத்தனை தாய் மொழிகள் இருந்தாலும் நைஜீரியா புற மொழியான இங்கிலீஷை அதிகாரப் பூர்வ மொழியாக்கியுள்ளது.
இந்தியா: 424 மொழிகள்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் சிறப்பு அதிக மொழிகள் பேசுவது மட்டுமல்ல, அந்த மொழிகளை மில்லியன் கணக்கான மக்கள் பேசுவது என்பதுதான் பெருமை. அதைவிட இங்கு ஏராளமான மொழிகளுக்கு தனித்தனி எழுத்து வடிவமும் இலக்கணமும் உள்ளது என்பது மிகவும் சிறப்பு. மற்ற நாடுகள் தேசிய மொழிதான் பெரும்பாலும் மக்கள் பேசுவார்கள்.
இங்கு 20 க்கும் மேற்பட்ட முதன்மை பிராந்திய மொழிகள் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்திய மொழிகள் பெரும்பாலும் சமஸ்கிருதம், தமிழ், பாளி, பிரகிருதியில் இருந்து உருவானவை. ஏராளமான மொழிகள் இருப்பதால் இந்தியா எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்து கொடுக்கவில்லை.
அமெரிக்கா: 364 மொழிகள்
உலகின் பெரிய அண்ணன் நாடான அமெரிக்காவில் 364 மொழிகள் பேசப்படுகின்றன என்பது ஆச்சரியமான விஷயமாக நினைக்கலாம். ஆனால், குடியேற்ற நாடான அமெரிக்காவில் இத்தனை மொழிகள் பேசுவது ஆச்சர்யம் இல்லை. அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் பிராந்திய ரீதியாக தனித்தனி மொழிகள் பேசுகின்றனர்.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் எல்லாம் குடியேறியதில் இவ்வளவு மொழிகள் அமெரிக்காவில் பேசப்படுவது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அதிகாரப்பூர்வ மொழியாக இங்கிலீஷ் இருந்தாலும், ஸ்பானிஷ், மாண்டிரின், ஹீப்ரூ, அரபி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் ஆப்பிரிக்க மொழிகள் உள்ளிட்ட ஏராளமான மொழிகள் புழக்கத்தில் உள்ளது.