
குதிரை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அதன் வனப்பான தோற்றம்தான். தமிழ் காவியங்களில் குதிரைகளைப் பற்றிய சிறப்பான தகவல்கள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
குதிரைகளின் பராமரிப்பு முறைகள்:
குதிரை உணவு:
ஓட்ஸ், பார்லி, மக்காச்சோளம், கொள்ளு முதலிய பயிர்கள் ஆகியவற்றை வெவ்வேறு நாடுகளில் கொடுப்பர். குதிரையின் பருமனுக்கும் அது செய்யும் வேலையின் பண்புக்கும், கடுமைக்கும் ஏற்றவாறு ஆறு - இருபது வரையில் உணவின் அளவு வேறுபடும். இதனோடு பச்சைப்புல்லோ, உலர்ந்ததோ போடவேண்டும். கடுமையான வேலை செய்யும் பிராணிக்கு புல் மட்டும் போதாது. நனைத்த தவிடு, சில சமயம் மஞ்சள் முள்ளங்கி ,குதிரை மசாலைக் கீரை ஆகியவற்றையும் போடுவார்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை தீனி கொடுக்க வேண்டும். தீனி தின்பதற்கு முன் தாராளமாக நீர் குடிக்க வைக்கவேண்டும்.
உடற்பயிற்சி:
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நடக்க வைக்க வேண்டும். சவாரி குதிரை 2 மணி நேரம் நடக்க அல்லது மெல்ல ஓடவேண்டும். விரைவாக ஓடும் குதிரைகளுக்கு பாலீஷ் மிகவும் அவசியம். அதனால் தோளில் உள்ள வேர்வை துவாரங்கள் நன்றாக திறந்திருக்கும். தசைகளின் உரம் செம்மையாகும்.
லாடம் அடித்தல்:
4, 5 வாரங்களுக்கு ஒருமுறை லாடம் தேய்ந்திருந்தாலும், தேயாவிட்டாலும் அடிப்பது நல்லது. இல்லாவிட்டால் குளம்பு அதிகமாக வளர்ந்துவிடும். லாடம் அடிக்காமல் விட்டிருந்தாலும் குளம்புகளை அவ்வப்போது சீவி செம்மைப்படுத்த வேண்டும்.
லாயம்:
வெப்பம் மிகாமல் குளிர்ச்சியாக இருக்கவேண்டும். காற்று நன்றாக அங்கு உலவவேண்டும். குளிர் மிகுதியான காலத்தில் குதிரைக்கு கம்பளம் போர்த்த வேண்டும்.
குதிரைகளின் வகைகள்:
தமிழ் காவியமாகிய சீவக சிந்தாமணியில் மாளவ நாட்டு குதிரைகள் வெண் குளம்பின: சிந்துவின் கரையில் உள்ளவை பறையொளிபோல முழங்கும்: நாவற்கனி போன்ற நிறத்தின: மராட்டிய நாட்டின் குதிரைகள் மயிலின் கழுத்து போன்ற நிறம் உடையவை. கப்பலில் வந்திறங்கிய வெளிநாட்டு குதிரைகளின் உடம்பின் நிறம் கிளி பச்சையாகவும், குளம்பின் நிறம் பவள நிறமாகவும் இருந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
அழகர் கிள்ளை விடு தூது என்னும் நூல் உயர்ந்த குதிரைகளுக்கு 'குதிரை நம்பிரான்' என்ற பெயருண்டு என்று கூறுகிறது.
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் கீழ்கண்டவாறு குதிரையின் வகைகள் கூறப்பட்டுள்ளன. பாடலம் என்னும் வகையைச் சேர்ந்தவை நெய் பசை உடைய மாந்தளிர் நிறமுடைய நாவின; உயர்ந்த குளம்பின, மார்பும் கழுத்தும் பாம்பின் படம் போன்றன.
கோடகம் என்பவை பரந்த நெற்றியும் குடுமிபோல ஒரே நிறமுடைய பிடரி மயிரும் குற்றமற்ற முக்கோணமான அழகிய முகமும் உடையவை.
குதிரை என்பவை கழுத்தில் சிறந்த தெய்வமணி எனப்படும் வலஞ்சுழி உடையவை. முகம், மார்பு உச்சி, வால், நான்கு கால்கள் ஆகியவை எனப்படும். உச்சியும், நான்கு கால்களும் மட்டும் வெண்மையாய் இருந்தால் பஞ்ச கல்யாணி எனப்படும்.
பரி என்பவை குங்குமம், கற்பூரம், மயில், கஸ்தூரி போன்ற மணங் கமழும். சங்கும், முகிலும், சரபமும், சிங்கமும் போலக் கனைக்கும்.
கந்துகம் என்பவை நான்கு கால்களும் கடைந்தெடுத்தாற்போல இருக்கும். சுழலும்போது கொள்ளி வட்டம்போல தெரியும். தன்மீது இருப்பவன் காலிலேயே அடங்கும். மற்றும் குதிரைகளின் சுழி முதலியவற்றை கொண்டு அவற்றின் வகையும் அவற்றை வைத்திருப்போருக்கு உண்டாகும் பலனும் பிறவும் அந்நூலிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
அரபிக் குதிரைகள்தான் மற்ற குதிரைகளுக்கு அடிப்படையாக இருந்தனவென்று கண்டுபிடித்துள்ளனர். இப்பொழுது எல்லா நாடுகளிலும் பரவி இருக்கின்றன. போர்க்களத்திற்கு வேண்டிய சவாரி குதிரைகளை உற்பத்தி செய்ய இந்த குதிரைகளையே அதிகமாக எல்லா நாடுகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
தொல்காப்பியத்தில் யானை நிலை, குதிரை நிலை, தானே நிலை என படைகளின் நிலை கூறப்படுகிறது. ஒரு சிற்றரசனுடைய குதிரைப்படை உளுந்து சக்கையை உண்டதனால் கடல் நீரை பிளந்து செல்லும் தோனிபோல எதிரின் படையை பிளந்து சென்றதென்றும், ஒரு பேரரசனுடைய குதிரைப்படை நெய்கலந்த கவளம் உண்டதனால் மதத்துச் சோம்பலுற்றுப் போர் மேற் கொள்ளாமல் விலகி நின்றது என்றும் புறநானூற்றுப் பாட்டு ஒன்று கூறுகிறது.
பிரஷ்ய நாட்டு மன்னனான பிரடரிக்கும், நெப்போலியனும் குதிரைப்படையை பயன்படுத்தினர். நெப்போலியன் குள்ளமாக இருப்பதால் தன்னம்பிக்கை குறைந்து இருந்தார் என்றும் அதனால் குதிரையின் மேல் எப்பொழுதும் இருப்பார் என்றும் படித்தி ருக்கிறோம். முதல் உலக யுத்தத்திலும் குதிரைப்படை ஓரளவு பயன்பட்டது. பன்னெடுங்காலமாக குதிரைப்பந்தயம் கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் நடைபெற்றதாக தெரிகிறது.
இப்படி குதிரையைப் பற்றிய செய்திகள் எல்லா நாடுகளிலும் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் கலை கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் விலங்காக குதிரை பயன்படுத்தப் பட்டிருக்கிறது தெரியவருகிறது.