இந்தியாவின் முதல் எஃகு உருக்காலை எது தெரியுமா?

Iron and steel plant
Iron and steel planthttps://tamil.goodreturns.in
Published on

மிழகத்தைப் பொறுத்தவரை, ‘ஸ்டீல் பிளான்ட்’ என்றாலே சேலம்தானே நினைவுக்கு வரும். ஆனால், இரும்பு கனிமத்துக்கான எந்த சுவடும் இல்லாத கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையை ‘போர்ட்நோவா’ என அந்நாளில் ஆங்கிலேயர்கள் அழைத்ததுதான் ஆச்சரியம்.

‘பரங்கிப்பேட்டையில் இரும்பு உருக்காலையா!’ என்ற ஆச்சரியம் உங்கள் மனதில் எழலாம் ஊரின் வரலாறு தெரியாத நம்மில் பலருக்கு.150 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர்கள் பரங்கிப்பேட்டையில் இந்தியாவின் முதல் இரும்பு உருக்காலையை உருவாக்கி, பரங்கிப்பேட்டைக்கு என்று தனி வரலாற்றுச் சுவடை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் 1818ல் கிழக்கிந்திய கம்பெனியில் சிவில் ஊழியராக பணியாற்றிய ஜே.எம்.ஹீத் என்பவர், சேலம் மண்டலப் பகுதிகளில் கிடைக்கும் இரும்புக் கனிமங்களில் இருந்து உள்ளூர் தொழில் நுட்பத்தில் இரும்பு எஃகு உற்பத்தி செய்ய முடியும் என கணித்தார். சேலம் இரும்புத் தாதிலிருந்து 55 முதல் 60 சதவிகிதம் வரை தரமான இரும்பு கிடைக்கும். அந்த இரும்பை உருக்கினால் நல்ல தரம் வாய்ந்த இரும்பை உற்பத்தி செய்யலாம் என இங்கிலாந்து அரசுக்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜே.எம்.ஹீத் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 1825ல் இங்கிலாந்து சென்று இரும்பு உருக்கு குறித்த தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு, 1830ல் மீண்டும் சென்னை திரும்பி, அன்றைய ஆங்கிலேய அரசின் அனுமதியைப் பெற்று, கல்வராயன் மலையில் கிடைக்கும் இரும்புத் தாதை ஆதாரமாகக் கொண்டு சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் இரும்பு எஃகு ஆலையை நிறுவினார்.

இந்த ஆலைக்குத் தேவையான இரும்புக் கனிமத்தை கல்வராயன்மலையிலிருந்து மணிமுக்தா ஆறு நீர்வழிப் போக்குவரத்து மூலம் கொண்டு வந்தார். உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வார்பட இரும்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்து அரசிடம் நிதியுதவி கோரினார்.

அரசும் இவரது முயற்சியை கருத்தில் கொண்டு சேலம், கோவை, மலபார், தென்னாற்காடு, கர்நாடகம் போன்ற இடங்களில் இரும்புத் தாது வெட்டியெடுக்க அனுமதி வழங்கி, முதற்கட்டமாக 75 ஆயிரம் ரூபாயும், பின்னர் மேலும், 3.60 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியது. இரும்பை உருக்க தேவையான எரிபொருளுக்கு தென்னாற்காடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் மரங்களை வெட்டி பயன்படுத்தவும் அனுமதி கிடைத்தது.

தலைமையின் ஒத்துழைப்பு, ஜே.எம்.ஹீத்தை உற்சாகப்படுத்தியது. இந்தியன் அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவ சென்னையைச் சேர்ந்த சிலருக்கு அழைப்பும் விடுத்தார். அதைத் தொடர்ந்து சூளை, உலை, உருக்கு ஆலை ஆகியவை பரங்கிப்பேட்டையில் 1833ல் நிறுவப்பட்டது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் விற்பனை செய்யுமளவுக்கு சிறந்த தரம் வாய்ந்த இரும்பை இந்நிறுவனம் உற்பத்தி செய்தது. ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த உருக்காலை இன்று உரு தெரியாமல் போய்விட்டது.

இதையும் படியுங்கள்:
குழந்தைப் பேறு தாமதமாகும் பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Iron and steel plant

ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகப்படியான இரும்புத் தேவைக்கேற்ப முதலீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் அவற்றின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதையடுத்து புதிய முதலீட்டைப் பெற ‘கிழக்கிந்திய இரும்புக் கம்பெனி’ என்ற நிறுவனம் 1853ல் லண்டனில் தோற்றுவிக்கப்பட்டு, 4 லட்சம் பவுன்ட் முதலீட்டில் பரங்கிப்பேட்டை இரும்பு உருக்காலை விரிவுப்படுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், பூலாம்பட்டியிலும், திருவண்ணாமலையிலும் புதிய உருக்காலைகள் நிறுவப்பட்டு, உயர் ரக வார்பட இரும்பு இங்கிலாந்துக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் உற்பத்தியான சர்க்கரை, சேலம், கோவை பகுதியில் உற்பத்தியான பருத்தி போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு சர்ச்சை எழுந்ததோடு, விறகை எரிபொருளாகக் கொண்டு ஸ்டீஸ் தயாரிப்பில் லாபமும் குறைந்தது. மரங்கள் வெட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேநேரத்தில் 1867ல் இங்கிலாந்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரும்புத் தாதுவிலிருந்து நேரடியாக எஃகு தயாரிக்கத் தொடங்கியதாலும், இந்திய இரும்பு ஏற்றுமதிக்கு அவசியமில்லாமல் போனது.

அதன் பிறகு எஃகு ஏற்றுமதி லாபகரமாக இல்லை. தண்டவாளங்கள், ரயில் சக்கரங்கள், ஆக்ஸில்கள் போன்ற ஆர்டர்களே அதிகமாக வரத் தொடங்கின. 34 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வந்த பரங்கிப்பேட்டை உருக்காலை 1867ல் மூடப்பட்டது என்பது ஒரு சோகமான வரலாறு தான்.

தகவல்கள் உதவி: கே.வி.எம்.எஸ்.சரவணக்குமார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com