தற்காப்புக் கலைகளின் ‘தாய்’ கலை எது தெரியுமா?

Do you know which is the 'mother' art of martial arts?
Do you know which is the 'mother' art of martial arts?https://medium.com

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அரபிக்கடலில் தன்னுடைய கோடரியை எறிந்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட பகுதிதான் இன்றைய கேரளா. தன்னால் உருவாக்கப்பட்ட புதிய நகரத்தை பாதுகாக்கும் பொருட்டு நான்கு பிராமணர்களை தேர்ந்தெடுத்து தன்னால் உருவாக்கப்பட்ட நகரத்தை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்தார். அவர்கள் நகரை நன்கு பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு பரசுராமர் அருளிய தற்காப்புக் கலைதான் களரி பயிற்சி. ‘கசத்திரியாஸ்’ எனும் அந்த நான்கு பேர் தாங்கள் கற்றுக் கொண்ட களரி வித்தையை அதன் பின்னர் 21 பலம் வாய்ந்த இளைஞர்களுக்குக் கற்றுத் தந்தனர். அப்படி உருவானதுதான், ‘களரி பயட்டு’ எனும் களரி விளையாட்டு.

‘களரி’ எனும் பெயர் சமஸ்கிருத பெயரான ‘களோரிகா’ என்பதிலிருந்து வந்தது. இதற்கு ‘பயிற்சி நடக்கும் இடம்’ என்று பொருள். இன்றும் களரி வித்தையை ஆரம்பிக்கும் முன்பு பூஜைகளில் அந்த நான்கு பிராமணர்கள் மற்றும் அடுத்து வந்த 21 குருமார்களுக்கும்தான் முதலில் பூஜை நடக்கும்.

களரி கேரளாவில் ஒரு பாரம்பரிய விளையாட்டு. இது 13ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே கேரளாவில் தோன்றி விட்டது. உலகின் முக்கியதுவம் மிக்க பல்வேறு தற்காப்பு கலைகளுக்கு இதுவே வேராகவும் இருந்தது. அதனால்தான் இதை தற்காப்புக் கலையின் தாய் என்கிறார்கள். ஒரு தற்காப்புக் கலை என்பதை தாண்டி இது ஒரு போர் பயிற்சியாகவும், உடற்பயிற்சியாகவும், ஒழுக்கப் பயிற்சியாகவும் இருக்கின்றது.

போதிதர்மர் கேரளாவில் களரி வித்தையை நன்கு கற்றுக் கொண்டு பின்னர் தான் கற்ற கலையை சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தி வைத்த புத்த துறவி. அதிலிருந்து தோன்றிய கலைகள்தான் ‘குங்பூ’ மற்றும் கராத்தே என்கிறார்கள்.

களரி விளையாட்டு வெறும் தற்காப்பு கலை மட்டுமல்ல, அடிப்படை மருத்துவ அறிவையும், தத்துவ போதனைகள் மற்றும் சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது. பலர் தாக்க வரும்போது எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, தாக்குதல் நேரத்தில் காயங்கள் ஏற்பட்டால் தனக்கும், எதிராளிக்கும் சிகிச்சை கொடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களும் அடங்கியது. இந்த விளையாட்டை நன்கு கற்றுக் கொண்டவர்களுக்கு உடலில் உள்ள வர்ம முடிச்சுகள் பற்றி நன்கு தெரியும். களரி கலையை நன்கு கற்றுக்கொண்டவர்களால் வர்ம முடிச்சுகளை சரியான இடத்தில் தட்டி நோய்களையும் குணப்படுத்த முடியும், அதேவேளையில் ஒரு ஆளை வீழ்த்தவும் முடியும்.

சீன அக்குபஞ்சர் வைத்தியம் இதன் அடிப்படையில் தோன்றியதே. களரியில் தந்திரமும், மந்திரமும் கூட உண்டு. களரி வித்தையை முழுவதும் கற்றுக்கொள்ள 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.

கேரளாவில் ஆரம்பத்தில் பலமான ஒருங்கிணைந்த ஆட்சி இல்லை. பல குறுநில மன்னர்களின் ஆட்சி முறைதான் இருந்தது. இதனால் குறுநில மன்னர்களுக்கு இடையே அடிக்கடி அடிதடி போர் நடந்து வந்தது. இதில் பலர் இரத்தம் சிந்தக்கூடாது என்று கருதிய மன்னர்கள் தங்களிடையே இருந்த களரி விளையாட்டு வீரர்களை ஒருவரோடொருவர் மோதவிட்டு அதில் வெற்றி பெற்று நிலங்களை கைப்பற்றினார்கள். இது கி.பி. 13 முதல் 16ம் நூற்றாண்டின் இறுதி வரை இருந்தது.

இதையும் படியுங்கள்:
மனித உடலில் எத்தனை வகையான சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன தெரியுமா?
Do you know which is the 'mother' art of martial arts?

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கேரளாவில் இருந்த களரி கலையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் களரிக்கு அவர்கள் தடை விதித்தார்கள். அதன் பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து வந்தது. இருப்பினும் கிராமப்புறங்களில் மறைவாக வளர்ந்து வந்த இந்த களரி விளையாட்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நன்கு வளர்ச்சி கண்டு தற்போது உலகெங்கிலும் விளையாடப்படுகிறது.

களரி பயிற்சியை செய்யும்போது உடலின் அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன. மனதையும், உடலையும் ஒன்றாக இயக்குகிறது. உடலின் செயல் திறனை அதிகரிக்கவும் அதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. உடலில் நெகிழ்வான தன்மையை உருவாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், நாடி நரம்புகளை வலுப்படுத்த உதவும். களரி பயிற்சி முதுகெலும்பை மையமாக கொண்டது என்பதால் இதனைச் செய்ய முதுகெலும்பு பலமாகிறது. முதுகு வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது.

களரி பயிற்சி மனதை கட்டுப்பாட்டில் வைக்க கற்றுக் கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக் கற்றுக் கொடுக்கும். உடலின் சக்தியை அதிகரிக்கும் களரி பயிற்சி தற்போது பல்வேறு நோய்களை தீர்க்கும் பயிற்சியாக மாறி வருகிறது. முதுகு வலி, கழுத்து வலி, தசைப்பிடிப்புகள் மற்றும் எடையை குறைக்க களரி பயிற்சி உதவுகிறது என்கிறார்கள்.

களரி பயிற்சியில் நான்கு வகைகள் உள்ளன. அவை, மெய்த்தாரி உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலை நெகிழ்வான நிலைக்கு வர உதவும் பயிற்சி. இரண்டாவது கோல்த்தாரி. இதில் கம்பு வைத்து செய்யும் பயிற்சி, தாக்குதல் பயிற்சி இடம் பெறும். மூன்றாம் நிலை அங்கத்தாரி பயிற்சி. இதில் கதை, கட்டாரி போன்ற ஆயுதங்களை பிரயோகிக்க கற்றுக் கொள்ளலாம். நான்காம் நிலை பயிற்சியில் வெறுங்கை பயிற்சி இதில் வெறுங்கையால் செய்யும் பயிற்சிகளை சொல்லித் தருவார்கள். இது களரி பயிற்சியில் மர்மமும், ஆபத்தும் நிறைந்த பயிற்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com