தமிழர்கள் எங்கு சென்றாலும் தங்களின் அடையாளத்தை அங்கு பதித்துவிட்டுதான் வருவார்கள். அதேபோல் மலேசியா, ஈழம், மொரிசியஸ், தென் ஆப்ரிக்காவென்று அங்கும் தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் இந்த மரத்தை கொண்டு சென்று நட்டிருக்கிறார்கள். நம் முன்னோர்கள் இந்த மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள். அத்தகைய சிறப்பு மிக்கது நம் இனத்திற்கான அடையாளமான பனைமரம்.
தமிழர்களின் பாரம்பரியமான விஷயங்கள் பல இன்று அழிவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த பனைமரம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் மூத்த மொழி தமிழ் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலை சுவடிகளில் இருந்து கிடைத்த வரலாற்றுத் தகவல்கள்தான்.
பனைமரம் தமிழருடைய வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருந்ததால்தான் நமக்கு தேவாரம், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களும், தமிழ் எழுத்துக்களும் நமக்குக் கிடைத்தன. பனை ஓலைகளில் எழுதப்பட்டதால் தன் இந்த இலக்கியங்களும், எழுத்துக்களும் தப்பி பிழைத்தன என பெருமையாகக் கூறலாம்.
மொழி மட்டுமில்லாமல், நம் இனத்தையே பாதுகாத்த பெருமை பனை மரத்திற்கு உண்டு. பல முன்னேறிய சமூகங்களில் எழுத்து வடிவம் தோன்றிய காலத்திற்கு முன்பிலிருந்தே பனை ஓலையில்தான் தமிழர்கள் எழுத்துக்களையும், பாடல்களையும் எழுதினார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கிணறுகளையும், மொழி திறனையும் வற்றாமல் வைத்திருப்பது பனை மரமாகும். தமிழர்களுக்கு என்று ஒரு முகவரி இருக்கிறது என்றால், அது கண்டிப்பாக பனை மரமாகத்தான் இருக்கும்.
பனைமரம் மூலம் மனித சமூகத்திற்கு 801 பயன்கள் கிடைப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ‘பனங்குருத்து’ என்று சொல்லப்படும் சிறுமரங்களை உடைக்கும்போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும், சத்தாகவும் இருக்கும். குறிப்பாக, கருவுற்ற பெண்களுக்கு இதைக் கொடுப்பார்கள். வளர்ந்து பெரிதானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை வீடுகளுக்கும் உட்காரவும் பயன்படுகிறது. கடுமையான வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஓலைக் கொடுக்கப்பட்டது.
பனை ஓலைகளில் செய்யப்படும் விசிறிகளில் குளுமையான காற்றுக் கிடைத்தது. பனை மட்டையில் இருந்து கிடைக்கும் நார் வீடு கட்டும்போது கயிறாகப் பயன்படுகிறது. பனைமரம் பாளை விடும்போது அந்தப் பாளையிலிருந்து பதநீர் கிடைக்கும். பனங்கிழங்கு மனிதனின் வயிற்றுப்புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்து. நார்ச்சத்து மிகுந்த இந்தக் கிழங்கை சாப்பிடும்போது வயிற்றின் உட்பகுதி பலமாகும். குறிப்பாக தொப்பை விழாது.
பனம் பாலை கொப்பரையில் ஊற்றி கொதிநிலையில் கட்டியாகும் பாகிலிருந்து ‘கருப்பட்டி’ என்னும் பனைவெல்லம் தயாரிக்கப்படுகிறது. ஆக, ஒரு மரத்தின் மூலமாக நம் இனத்திற்குத் தேவையான அனைத்தையுமே தமிழன் பெற்று வந்தான். பனைமரம் இருக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்படாது. பனைமரம் நிலத்தடி நீரை சேமிப்பதற்கு நமக்கு பெரிதும் உதவியது. இத்தகைய சிறப்புமிக்க பனைமரம்தான் தமிழர்களின் அடையாளமாக விளங்கியது.