ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றாலும், அவர்களுடைய சில பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மிடையே இரண்டறக் கலந்துதான் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை வீரர்களுக்கும், மக்களுக்காக போராட்டம் நடத்தி உயிர் நீத்தவர்களுக்கும், அரிய சாதனை புரிந்தவர்களுக்கும், அரசியலில் சாதித்த தலைவர்களுக்கும் சிலை வைக்கப்படுவதும் வழக்கம்தான். இந்த சிலை வைக்கும் கலாசாரம் உருவான விதம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சென்னையில் முதன் முதலில் வைக்கப்பட்ட சிலை கர்னல் நீல் என்பவனுடையதுதான். அண்ணாசாலையில் உள்ள கலைக் கல்லூரி - ஸ்பென்ஸர் கம்பெனிக்கு இடையேயுள்ள சந்திப்பில் இச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இவன் ஈவு இரக்கமின்றிப் புரட்சியாளர்களைக் கொன்றவன்.
முதன் முதலில் அந்நிய ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் 1857ல் நடைபெற்றது. இதை வெள்ளைக்காரர்கள் 'சிப்பாய்க் கலகம் என்று அழைத்தனர். அந்தச் சமயத்தில் கர்னல் நீல் சென்னையில் ராணுவ அதிகாரியாக இருந்தான். புரட்சியை அடக்க இவன் வடநாடு சென்றான். இவன் ஈவு இரக்கமின்றிப் புரட்சியாளர்களைக் கொன்று புரட்சியை அடக்கியதைப் பாராட்டி இச்சிலையைப் பிரிட்டிஷ் ஆட்சி சென்னையில் வைத்தது.
இந்தச் சிலையை அகற்ற ஒரு சத்தியாக்கிரகமே நடைபெற்றது. இந்தக் கொலை பாதகனுக்குச் சிலை இருக்கக்கூடாது. இதைத் தகர்க்க வேண்டும் எனும் இயக்கம் 1927 ஆகஸ்ட் 15ம் தேதி ஆரம்பமாயிற்று. காந்திஜியின் யோசனைப்படி இந்தத் தகர்க்கும் வேலை கைவிடப்பட்டது. சிலை விஷயத்தில்கூட காந்திஜி தனது அகிம்சை கொள்கையைக் கைவிடத் தயாராக இல்லை.
1937ல் ராஜாஜி முதல் மந்திரியாகப் பதவி ஏற்றதும் முதல் வேலையாக இந்தச் சிலையை அகற்ற உத்தரவிட்டார். இது இப்போது சென்னை மியூசியத்தில் ஓர் இருண்ட மூலையில் இருக்கிறது.
மக்களுக்காக சேவை புரிந்து சாதனை புரிந்த தலைவர்களின் சிலைகள் சிலைகளாக மட்டுமன்றி, நல்ல மனிதர்களாக எப்போதும் மக்கள் மனதில் வாழ்வார்கள். வீண் பிரபலத்திற்காக வைக்கப்படும் சிலைகள் இருண்ட மூலையில்தான் கிடக்கும் என்பதற்கு இந்த கர்னல் நீல் சிலை ஒரு உதாரணம்.