நமது உடலில் பாயும் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் எலும்பு மஜ்ஜையில் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுடன் உருவாக்கப்படுகின்றன. அவை த்ரோம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. த்ரோம்போசைட்டோபீனியா என்பது இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு நிலையாகும். அவை எலும்பு மஜ்ஜையில் உருவாகி இரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறிய காயத்திற்கும் இரத்தம் அதிகம் வெளியேறுதல் அல்லது எளிதில் ஏற்படும் சிராய்ப்புகள் ஆகியவை ஏற்படும். வாய், மூக்கு மற்றும் இரைப்பைக் குழாயிலிருந்து இரத்தம் வடிதலை அதிகமாக்கும்.
பொதுவாக, பிளேட்லெட்டுகளுக்கான இயல்பான வரம்பு 150,000 - 300,000/mm 3 ஆகும். பிளேட்லெட் எண்ணிக்கை 150,000/mm 3க்கும் குறைவாக இருக்கும்போது ஒரு நபருக்கு த்ரோம்போசைட்டோபீனியா பிரச்னை உள்ளதாக அறியலாம். பரிசோதனை ஆய்வகங்களுக்கு இடையில் பிளேட்லெட்டுகளின் இயல்பான அளவு மாறுபடும் வாய்ப்புகள் உள்ளது.
எலும்பு மஜ்ஜை சாதாரணமாக அதன் வேலையை சரியாக செய்யாதது மற்றும் போதுமான பிளேட்லெட்டுகளை உருவாக்காமல் போவது த்ரோம்போசைட்டோபீனியா உருவாகக் காரணமாகிறது. மேலும், லுகேமியா போன்ற சில புற்றுநோய்கள் மற்றும் அதற்கான கடுமையான சிகிச்சைகள் இப்பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையின் அறிகுறிகளாக மருத்துவர்கள் குறிப்பிடும் பாதிப்புகள்: சிறு உராய்தலுக்கும் எளிதில் சிராய்ப்பு, சருமத்தின் கீழ் சிறிய சிவப்பு புள்ளிகள் அல்லது பெட்டீசியா, ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கு, ஒரு சிறிய வெட்டு அல்லது காயம் பட்ட இடத்திலிருந்து நிறைய அல்லது எளிதில் நிற்காத இரத்தப்போக்கு, சிறுநீரில் இரத்தம், மலம் அல்லது கருப்பு நிற மலத்தில் இரத்தம், வாந்தி, சாதாரண மாதவிடாய் காலத்திலிருந்து வேறுபட்ட பிறப்புறுப்பு இரத்தப்போக்கு மற்றும் நிலையான தலைவலி, மங்கலான பார்வை அல்லது உணர்வு நிலை மாற்றம் ஆகியவைகள்.
த்ரோம்போசைட்டோபீனியா அறிகுறிகளில் இருந்து உடலைப் பாதுகாக்க: காயம் அல்லது சிராய்ப்பு ஏற்படக்கூடிய செயல்கள், விளையாட்டுகளைத் தவிர்க்கவும். மாற்று மருத்துவங்கள், நல்ல வாய் பராமரிப்பு பயிற்சி அவசியம். சாப்பிட்ட பிறகு பல் துலக்கி கழுவவும். ஈறுகளில் இரத்தம் வராமல் இருக்க, கூடுதல் மென்மையான டூத் பிரஷ் போன்றவற்றை உபயோகிக்கவும். இன்னும் இதுபோன்ற பல முன்னெச்சரிக்கைகளை மருத்துவ ஆலோசனையில் பெறவும்.
குறிப்பாக, யோகா அல்லது உடலியக்க சிகிச்சை போன்ற அழுத்தம் மிகுந்த மசாஜ் நுட்பங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு சிகிச்சையையும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிந்துரை தேவை. மேலும், இந்த பாதிப்புகளைக் கண்டால் அச்சப்படாமல் உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசனை பெறுவது முக்கியம். இதற்கென உள்ள சிகிச்சைகள் மற்றும் சமச்சீர் உணவுகள் மூலம் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரித்து இரத்தப்போக்கை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியம் பெறலாம்.