
இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் இந்திய நகரங்கள் சிலவற்றிற்கு, தனித்துவமான சில புனைப்பெயர்களை வைத்திருக்கிறார்கள். அவற்றில் அரண்மனைகளின் நகரம் பற்றிப் பார்ப்போம்.
நகரங்களின் தனித்துவமான பண்புகள், தனித்துவமான புவியியல் இருப்பிடம், அந் நகரத்தின் புகழ், இயற்கை அழகு போன்ற இயற்கை உள் கட்டமைப்புகளின் அடிப்படையில் புனைப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் அரண்மனைகளின் நகரம் எது தெரியுமா?
கொல்கத்தா. கொல்கத்தா முன்னர் கல்கத்தா என அழைக்கப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டில் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸால் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
இது ஹுக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது மேற்கு வங்காளத்தின் தலை நகரமாகவும் இருக்கிறது.
இங்குள்ள கட்டிடங்கள் கோதிக், பரோக், ரோமன், ஓரியண்டல் மற்றும் இஸ்லாமிய வடிவமைப்பு தாக்கங்களை கொண்டுள்ளது.
ஆங்கிலேய ஜென்டில் மேன் மற்றும் பெங்காலி பாபு ஆகியோரின் ரசனைகளால் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு பார்போரை ஈர்க்கும் வகையில் மைய நகரம் முழுவதும் கட்டப்பட்டு, ஏராளமான அரண்மனை மாளிகைகளின் கவின் மிகு அழகே, இந்நகரம் இந்தியாவின் அரண்மனைகளின் நகரம் என்று அழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
இக்கட்டிடக்கலை வகைகளின் தளவமைப்பே அதன் அழகான தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பிரிட்டிஷ் இராஜ்யம்
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராஜ்யத்தால் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டது. இக்கட்டிடங்கள் இன்றும் பராமரிக்கப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
இது நமது நாட்டின் வளமான வரலாறு மற்றும் சுதந்திர போராட்டத்தின் கட்டிடகலைக்கு ஒரு சான்றாக இருந்து வருகின்றன. இதுவும் அரண்மனைகளின் நகரம் என்று அழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
சான்றுகளாக, பிரபலமான சில நினைவு சின்னங்களைப் (அரண்மனைகள்) கீழே காண்போம்.
விக்டோரியா மெம்மோரியல்
இது விக்டோரியா மகாராணியின் நினைவாகக் கட்டப்பட்டது. இது பெரிய வெள்ளைநிற பளிங்கு அருங்காட்சியகம் ஆகும். அழகான சிற்பங்களால் சூழப்பட்ட ஒரு குவிமாடம் கொண்டது. இது முகலாய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைத் தாக்கங்களை கொண்டது. கோதிக் கூறுகளுடன் கலக்கப்பட்டது. இங்கு உள்ள அழகான தோட்டங்களில் ஏராளமான பிரிட்டிஷ் பிரமுகர்களின் சிலைகள் உள்ளன.
மார்பிள் அரண்மனை
வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள 19 ஆம் நூற்றாண்டின் மாளிகை ஆகும். இதன் பளிங்கு தளங்கள், மிருகக்காட்சி சாலை மற்றும் சில சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. இது இராஜ இராஜேந்திர முல்லிக் என்பவரால் நியோகிளாஸிக்கல் பாணியில், சிறப்பியல்புகள் கொண்ட கொரிந்திய தூண்களுடன் கட்டப்பட்டது. இதில், பாரம்பரிய வங்காள கட்டிடக்கலை கூறுகளும் கலந்துள்ளன.
செயிண்ட் பால்ஸ் கதீட்ரல்
இது ஆசியாவின் முதல் எபிஸ்கோபல் தேவாலயம் ஆகும். இது கொல்கத்தாவில் அமைந்துள்ளது. ஆங்கிலிகன் பின்னணியைக் கொண்டது. இதன் கட்டிடக்கலை கோதிக் அல்லது இந்தோ கோதிக் பாணி தாக்கங்களை கொண்டுள்ளது. இதன் சிறப்பியல்பு வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், கோபுரங்கள் மற்றும் வளைவுகள் கொண்டுள்ளது. இது அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகளுடன் ஒரு நூலகத்தையும் கொண்டுள்ளது.
கொல்கத்தா பொதுத் தபால் நிலையம்
இது நியோகிளாஸிக்கல் பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையத்தை ஒரு குவிமாடம் வகைப்படுத்துகிறது. தொடர்ச்சியான அயனி கொரிந்தியன் தூண்கள் அலங்கரிக்கின்றன. இது பல கலைப்பொருட்கள் மற்றும் தபால் முத்திரைகளைக் காண்பிக்கும் ஒரு தபால் அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது.
இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம், வீரம் ஆகியவற்றில் மன்னர்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த மன்னர்களின் பெயர்கள் காலத்திற்கும் நிலைத்திருக்கும் வகையில் இன்றும் அவர்களின் பெருமையை பேசிக்கொண்டிருக்கின்றன, இந்த கம்பீர அரண்மனைகள்!