
உலக மக்கள் தொகையில் பெரும்பாலோர் நவீன யுகத்தில் வாழ்ந்து வரும் வேளையில், உலகின் சில பகுதிகளில் இன்னும் ஆதிகால வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவின் தெற்கு பப்புவா மாகாணத்தில் வசிக்கும் அஸ்மத் பழங்குடி மக்கள் சடங்கு நரமாமிசத்தை உண்ணும் வழக்கத்தை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் கொல்லப்பட்ட எதிரிகளின் சதை மற்றும் மூளையை உண்பதன் மூலம் தங்கள் மூதாதையர்களின் ஆவிகளுக்கு சக்தி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
கி.பி 1623 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்மத் பழங்குடியினர் 1950 கள் வரை பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டே வாழ்ந்து வந்தனர். இவர்கள் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள அஸ்மத் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்விடங்கள் சதுப்புநில காடுகள், அலை சதுப்பு நிலங்கள், நன்னீர் சதுப்பு நிலங்கள் மற்றும் தாழ்வான மழைக்காடுகள் நிறைந்ததாக காணப்படுகிறது.
தங்கள் முகங்கள் மீது வரைந்து கொள்வது, மண்டை ஓடுகளை அணிவது மற்றும் பாரம்பரிய ஈட்டிகளை கொண்டு வேட்டையாடுவது போன்ற பழங்கால பழக்க வழக்கங்களை இவர்கள் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் மனித சதையை உண்பதை உணவுக்கான ஆதாரமாக பார்க்காமல் ஒரு மத சடங்காகவே கடைப்பிடித்து வருகின்றனர். தங்களின் மூதாதையர்களை சாந்தப்படுத்த எதிரிகளின் இரத்தத்தை சிந்துவது அவசியம் என்றும், இறந்த உறவினரைப் பழிவாங்குவது அவர்களது நெருங்கிய உறவினர்களின் கடமை என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இறந்தவர்களின் மண்டை ஓடுகளை உணவு சமைக்கப் பயன்படுத்துவதும் இவர்களின் வழக்கமாக உள்ளது. அதாவது, இறந்த எதிரியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் சவ்வரிசியுடன் கலந்து, பனை ஓலைகளில் சுற்றி, பின்னர் தீயில் வறுத்து உண்கின்றனர். இது அவர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.
மேலும், மரச் சிலைகளை எதிரிகளின் இரத்தத்தால் மெருகூட்டி, வீடுகளை மண்டை ஓடுகளால் அலங்கரிக்கின்றனர். இறந்தவர்களின் ஆவி தங்களைக் காக்கும், தங்களுக்கு பலம் தரும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
சமீப காலங்களில் அஸ்மத் பகுதிக்குள் நுழைந்த வெளிநாட்டவர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 1961 ஆம் ஆண்டில் அப்போதைய நியூயார்க் ஆளுநர் நெல்சன் ராக்பெல்லரின் 23 வயது மகன் மைக்கேல் ராக்பெல்லர் பப்புவா பகுதியில் காணாமல் போனார். அவரை அஸ்மத் பழங்குடியினர் கொன்று சாப்பிட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.
இருப்பினும், சமீப காலமாக அஸ்மத் பழங்குடியினர் மத்தியில் நரமாமிசம் சாப்பிடும் பழக்கம் குறைந்து வருவதாக மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அஸ்மத் பகுதிக்குள் நுழைவது இன்னும் ஆபத்தானது என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.