ஆங்கில மாதங்கள் 12ல், 11 மாதங்களில் 30 அல்லது 31 நாட்கள் இருக்கும்போது, பிப்ரவரியில் மட்டும் ஏன் 28 நாட்கள் இருக்கின்றன தெரியுமா? நாட்காட்டி வரலாற்றை நோக்கும்போது பண்டைய ரோமில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த நாட்காட்டியில், அன்றைய ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர் பெயரில் ஜூலை மாதமும், அவருக்குப் பின் வந்த அகஸ்டஸ் சீசர் பெயரில் ஆகஸ்ட் மாதமும் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டன. இங்கேதான் நடந்தது அந்த மாற்றம்.
ஜூலியஸ் சீசர் காலம் முடியும் வரை பிப்ரவரி மாதமும் 30 நாட்களைக் கொண்டிருந்தது. புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்த ஆகஸ்ட் மாதம் 29 நாட்களைக் கொண்டிருந்தது. ஆனால், அகஸ்டஸ் சீசர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதத்தில் 31 நாட்கள் இருப்பதைப் போலவே, தன்னுடைய பெயரிலிருக்கும் ஆகஸ்டு மாதத்திலும் 2 நாட்கள் கூடுதலாக இருக்க வேண்டுமென்று நாட்காட்டியை மாற்றி விட்டார்.
ஓர் ஆண்டில் ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் 31 நாட்கள் வருவது மாறி, ஜூலை, ஆகஸ்ட் என அடுத்தடுத்த மாதங்களில் 31 நாட்கள் வருகின்றன அல்லவா? அதற்கு இதுதான் காரணம். அகஸ்டஸ் சீசர் இப்படி 2 நாட்களை எடுத்துக்கொண்டதால், அன்றைக்கு ரோமானிய நாட்காட்டியில் கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியிலிருந்து 2 நாட்கள் கழற்றிவிடப்பட்டன. 'ஒரு விஷயத்தை மாற்று' என்று பேரரசர் ஒருவர் சொல்லும்போது நாட்காட்டி உருவாக்குபவர்கள் அதை முடியாது என்று சொல்ல முடியுமா?
பிப்ரவரி மாதத்தில் பொதுவாக 28 நாட்கள்தான். லீப் வருடத்தில்தான் 29 நாட்கள் வருகின்றன. ‘ஏன் அப்படி என நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? பண்டைய ரோமானிய பேரரசில் விவசாயம்தான் பிரதான தொழில். எனவே வேளாண் காலநிலைகளைப் பொறுத்தே அங்கு மாதங்களும் நாட்களும் நிர்ணயிக்கப்பட்டன.
உண்மையில் பத்து மாதங்கள் மட்டுமே முதலில் கணக்கிடப்பட்டன. அதாவது, மார்ச் முதல் டிசம்பர் வரை. மொத்தம் 304 நாட்கள். ஆனால், சந்திர காலண்டர்படி 355 நாட்கள் (12 சந்திர தொடர்கள்) மீதமிருக்கும் நாட்களை குளிர்காலம் என ரோமானியர்கள் பெயர் வைக்காமலேயே கழித்தனர். இதை மன்னரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவருக்குப் பின் வந்தவர் இது சரியல்ல என்று ஒரு கூட்டத்தைக் கூட்டி புதிதாக இரண்டு மாதங்களைச் சேர்த்தார். அவைதான் ஜனவரியும் பிப்ரவரியும்.
இரட்டைப்படை எண்களுக்கும் ரோமானிய பேரரசிற்கும் ஆகாது என்பதால், ஒவ்வொரு மாதத்தையும் ஒற்றைப்படை எண்களாக வருமாறு அமைத்தார். அதன்படி 7 மாதங்கள் 29 நாட்கள் = 203. 4 மாதங்கள் 31 நாட்கள் = 124. மொத்தம் 327 நாட்கள். ஆனால், சந்திர தொடர்படி 355 நாட்கள். எனவே, மீதமிருப்பது 28 நாட்கள். அந்த 28 நாட்களும் பிப்ரவரி மாதத்தில் வரவு வைக்கப்பட்டன. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் பிப்ரவரிதான் வருடத்தின் கடைசி மாதம்.
அதன் பிறகு சூரிய தொடரைக் கொண்டு வருடம் கணக்கிடப்பட்டபோது 365.24 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது அனைத்து மாதங்களின் கணக்கையும் மாற்றிய சீசர் ஏனோ பிப்ரவரியை கண்டுகொள்ளவில்லை. எனவே பிப்ரவரிக்கு அதே 28 நாட்கள் அப்படியே தொடர்ந்தன.
ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் அந்த 0.24 நாட்கள், நான்கு வருடங்களில் ஒரு நாளாக உருவெடுக்கும். எனவே, அதை எதனோடு சேர்ப்பது என குழப்பம் வந்தபோது இருக்கவே இருக்கிறது பிப்ரவரி மாதம். அதில் சேர்த்துவிடு என்று லீப் வருடத்தில் 29 நாட்களாக மாற்றப்பட்டதுதான் லீப் வருட பிப்ரவரி மாதம்.