ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்னை முடி கொட்டுதல். தலை வாரும்போது சீப்பில் ஒரு கொத்து முடி பிய்த்துக் கொண்டு வருவதைக் காணும்போது மனதுக்குள் ஒரு பதைபதைப்பு உண்டாகுமே, அதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. 'என்ன இது, முடி இப்படிக் கொட்டினால் தலை வழுக்கையாகவே ஆயிடும் போல. இதை எப்படித் தடுப்பது' என எண்ண ஓட்டம் தறி கெட்டு ஓடும். உங்களுக்காகவேதான் இந்தப் பதிவு. பூண்டுப் பொடி உபயோகித்து எப்படி முடி உதிர்வைத் தடுக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பூண்டுப் பொடியில் சல்ஃபர் அதிகம் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்தி முடி உதிர்வைக் குறைக்க உதவும்.
2. பூண்டுப் பொடி ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டது. இது தலைப் பகுதியின் சருமத்தில் சாதாரணமாகக் காணப்படும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி அழிக்க உதவும். இந்தக் கிருமிகள் இருப்பதாலேயே முடி உதிர்வு உண்டாகிறது.
இனி இந்தப் பூண்டுப் பொடியை எவ்வாறு உபயோகிப்பது என்பதைப் பார்க்கலாம். சிறிது பூண்டுப் பொடியுடன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். இந்தப் பேஸ்டை முடியின் வேர்க்கால்களில் படும்படி தலை முழுவதும் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
அந்தப் பேஸ்ட் தலை முழுவதும் சமமாகப் பரவும் வகையில் 10 நிமிடம் தொடர்ந்து மசாஜ் செய்துவிட்டு, ஊட்டச் சத்துக்கள் உள்ளே உறிஞ்சப்படுவதற்கு 30 நிமிடம் அப்படியே விட்டு விடவும். பிறகு பூண்டு வாசனை நீங்க, மெலிதான (Mild) குணம் கொண்ட ஷாம்பு உபயோகித்து தலை முடி மற்றும் ஸ்கால்ப் பகுதியை தண்ணீரால் நன்கு அலசி விடவும்.
இந்த சிகிச்சை முறையை வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்து முடி கொட்டுவது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பூண்டுப் பொடி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதை உபயோகிக்க ஆரம்பிக்கும் முன்பு, மாதிரிக்காக சிறிதளவு பேஸ்டை முடியின் ஒரு சிறு பகுதியில் தேய்த்து, ஒவ்வாமை அறிகுறி தென்படுகிறதா எனப் பரிசோதித்த பிறகு தொடர்வது நலம்.