காதணிகளின் வரலாறு மிகவும் பழமையானது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. காதணிகள் பொதுவாக காது மடல்களில் துளையிட்டும், காதின் கீழ்ப் பகுதியிலும் அணியப்படுகின்ற நகையாகும். இவை பல வரலாற்று காலகட்டங்களில் அணியப்பட்டு வந்திருக்கின்றன.
பண்டைய இந்தியாவில் ஜும்கா காதணிகள் கோவில் நகைகளாக உருவானது. புனித ஒலிகளை குறிக்கும் மணி வடிவத்துடன் கோவில் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்டு செய்யப்பட்டன. பெண்கள் பெரும்பாலும் அணியும் தொங்கும் மணி வடிவ பாரம்பரிய காதணிகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
சுமேரியர்கள் கிமு 2600 இல் பொன், கார்னிலியன் மற்றும் லேபிஸ் லாசுலி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட காதணிகளை பயன்படுத்தியுள்ளனர். எகிப்தியர்களோ கி மு 1650 முதல் காதணிகளை அணிந்துள்ளனர். குறிப்பாக பரோக் முத்துக்கள் பிரபலமாக இருந்துள்ளன. தங்கம், வெள்ளியால் ஆன வளைய காதணிகளும் பண்டைய எகிப்தில் பிரபலமாக இருந்துள்ளன.
பண்டைய தமிழர்கள் அணிந்து வந்த காதணிகள் தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல், டோலாக்கு, தண்டட்டி போன்றவையும், ஆண்கள் காதுகளில் கடுக்கன் எனப்படும் ஏதேனும் ஒரு ரத்தினக்கல் பொருத்தப்பட்ட தங்க ஆபரணம் அணிந்து கொள்ளும் வழக்கமும் 19 ஆம் நூற்றாண்டு வரையில் பிரபலமாக இருந்தது. கோவில் சிற்பங்களில் உள்ள நடராஜர் உருவங்களில் காணப்படும் அணிகலன்களே காதணி அணிவது தமிழர் பண்பாடுகளில் தொன்மையானது என்பதற்கான சான்றாகும். இவற்றில் சில நகைகளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாமல் போய்விட்டது.
பாம்படம், தண்டட்டி:
காது வளர்த்தலும், காதுகளை தங்க ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்வதும் தமிழ் சமூகத்தின் தொன்மையான நடைமுறைகளாக இருந்தன என்பதற்கு ஆலய சிற்பங்களே ஆதாரமாக உள்ளன. பாம்படம், தண்டட்டி என்று அழைக்கப்படும் கனத்த காதணிகளின் சிறப்பு அவற்றின் வடிவநேர்த்தி. சதுரங்கள், முக்கோணங்கள் கொண்ட தண்டட்டி ஒரு பிரமிடு போல காணப்படும்.
தொங்கிக் கொண்டிருக்கும் செவி மடல்களில் பொருத்தப்படும் தண்டட்டியை பூட்டி வைக்கும் ஸ்க்ரூ ஒரு பந்து வடிவில் இருக்கும். சில தண்டட்டிகளில், அணியும் பெண் பெயரின் முதல் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். தண்டட்டியில் பல்வேறு வடிவங்கள் உண்டு. வடிவங்களை பொறுத்து காதணியின் பெயர்களும் மாறுபடும். பாம்பு போல வடிவம் கொண்ட காதணிக்கு 'பாம்படம்' அல்லது 'நாகவடம்' என்றும், பல்வேறு வளையங்களை ஒன்றாக இணைத்து அணியும் காதணிக்கு 'சவுடி' என்றும் பெயர்.
காதணிகளின் வகைகள்:
a) வளைய காதணிகள் (Hoop earrings):
பண்டைய எகிப்து, கிரீஸ் மற்றும் ரோம் ஆகியவற்றிலிருந்து தொல்பொருள் தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
b) ஜூம்கா காதணிகள் (Jhumka earrings):
பண்டைய இந்தியாவில் இவை கோவில் நகைகளாக உருவானவை.
c) ஸ்டட் (Stud earrings) காதணிகள்:
பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் இவை மிகவும் எளிமையானவை. பல வடிவங்களிலும் காணப்படுகின்றன.
d) தொங்கும் காதணிகள் (Dangle earrings):
இவையும் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளவை. பல்வேறு வடிவங்களிலும் அழகாக மிளிர்கின்றவை.
காதணிகள் உலோகம், பிளாஸ்டிக், கண்ணாடி, விலை உயர்ந்த கல், மரம் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. தங்க காதணிகள் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் இருந்தன.
ஆரம்ப காலங்களில் காதணிகள் அணியும் பழக்கம் ஆண்களிடமும் பிரபலமாக இருந்தது. 1960 களின் நடுப்பகுதியில் சில மருத்துவர்கள் காது குத்துவதை ஒரு சேவையாக செய்து வந்தனர். 1970களின் முற்பகுதியில் பெண்கள் மத்தியில் காது குத்துதல் என்பது பொதுவானதாக இருந்தது. 1980 களில் ஆண் பிரபல இசை கலைஞர்கள் காதுகளை துளைத்து காதணிகள் அணியும் போக்கு பிரபலமானதாக இருந்தது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்குடி கலாச்சாரங்களில் பொதுவாக காணப்பட்ட காது மடல் நீட்சி இன்றைய காலகட்டங்களில் அரிதானது. வளையங்கள், தொங்கும் காதணிகள், சரவிளக்கு காதணிகள் (சரவிளக்குகளைப் போன்ற தோற்றத்தை கொண்டு காதுக்கு கீழே தொங்கும் வடிவமைப்புடன் மேற்புறத்தை விட அடிப்பகுதியில் அகலமாக காணப்படும்), ஜூம்கா காதணிகள் போன்றவை பாரம்பரிய காதணிகளாகும்.