
கோடைக் காலத்தில் சரும பராமரிப்பு என்பது பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. கடும் வெயிலில் புறா ஊதாக்கதிர்கள் சருமத்தின் நிறத்தை பாதிப்பதுடன் கறைகள் மற்றும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது. கோடையில் சருமத்தை பாதுகாப்பது மிக அவசியம்.
அதே சமயம் முகத்தை குளுமையான பொருட்களை வைத்து பேஷியல் செய்வது அதிக புத்துணர்ச்சி ஊட்டும் செயலாக இருக்கும். கோடையில் ஐஸ் பேஷியல் சிறப்பானதாக இருக்கும். இந்த முறையில், முகத்தில் ஐஸ் கட்டியை துணியில் சுற்றி முகத்தில் மெதுவாக ஒற்றி எடுக்கவேண்டும். சரியாக 1 நிமிடம் வரை இவ்வாறு செய்வதால் இது பருக்களை குறைக்கிறது, சரும நிறத்தை மேம்படுத்துகிறது, கண்களின் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் முகத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதே நேரம் அதிக நிமிடங்கள் இந்த பேஷியலை செய்யக்கூடாது.
கிரீன் டீ ஐஸ் பேஷியல்:
கிரீன் டீ ஐஸ் கட்டிகள் தயாரிக்க, கிரீன் டீயை கொதிக்க வைத்து ஆறவைத்து, பின்னர் அதை ஒரு ஐஸ் தட்டில் ஊற்றி உறைய வைக்கவும். உறைந்த பிறகு, இந்த ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவவும்.கிரீன் டீ ஐஸ் கட்டிகளை வைத்து பேஷியல் செய்வதால் முகப்பருவைக் குறைக்க உதவுகிறது, சருமத்திற்கு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கி வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தைப் பிரகாசமாக்கி நிறத்தையும் மேம்படுத்துகிறது.
இது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து இறந்த சரும செல்களை வெளியேற்றுகிறது. கிரீன் டீ கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்துளைகளை இறுக்கமாக்குகிறது.
வெள்ளரிக்காய் & எலுமிச்சை ஐஸ் பேஷியல்:
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து, அதை ஒரு ஐஸ் தட்டில் ஊற்றி உறைய வைக்கவும். பிறகு இந்த ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவவும். வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி குளிர்ச்சியூட்டுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பளபளப்புடனும் ஆக்குகிறது. இது சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் நிறமிகளைக் குறைக்க உதவுகிறது.இதில் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சருமத்தின் pH அளவை பராமரிக்கவும் உதவுகின்றன.
பால் மற்றும் தேன் ஐஸ் பேஷியல்:
பால் மற்றும் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு ஐஸ் தட்டில் ஊற்றி ஃப்ரீசரில் உறையவைக்கவும். பின்னர் இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவி பேஷியல் செய்யவும். பால் மற்றும் தேன் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கிறது. இரண்டும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறது.
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது பருக்கள் மற்றும் தழும்புகளைக் குறைக்க உதவுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி பொழிவாக்குகிறது. இது தவிர, பாலில் உள்ள வைட்டமின்கள் முகத்தை இளமையுடன் வைக்கிறது.
கற்றாழை ஐஸ் பேஷியல்:
கற்றாழை ஜெல்லை தண்ணீரில் கலந்து ஒரு ஐஸ் தட்டில் உறைய வைக்கவும். இதற்குப் பிறகு இந்த க்யூப்ஸை முகத்தில் தடவவும். கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தில் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கின்றன. இதன் குளிர்ச்சியூட்டும் பண்புகள் சிவத்தல், எரிச்சல், வெயில் மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளைக் குறைக்கிறது.
இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்கள் மற்றும் தழும்புகளைக் குறைக்க உதவுகின்றன. கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.