தேர்தலில் 'ஒரு விரல் புரட்சி'யின் ஹீரோவான 'மை'யின் கதை தெரியுமா?

Election ink
Election ink
Published on

மக்களவைத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவிட்டது. தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு மக்களிடம் களைகட்டத் துவங்கி விட்டது.

மனிதரின் ஒரே உரிமை அவரவரின் ஒட்டைத் தவறாமல் போடுவது தான். ஆனால், இதிலும் கள்ள ஓட்டு மூலம் மற்றவர்கள் ஓட்டை போட்டு விடும் அவலம் நடக்கிறது. இதைத் தடுக்கவே வாக்களிப்பவர்களின் கைகளில் அழியாத 'மை' வைக்கப்படுகிறது. உண்மையில் கையில் வைத்த மை சான்றுடன் சிறிது நாட்கள் வலம் வரும் போது நாமும் இந்நாட்டின் மன்னர் என்ற நினைவு தோன்றும். ஒரு விரல் புரட்சியின் ஹீரோவான மை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

முதன் முதலாக இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் சுமார் 12 ஆண்டுகள் கழித்து கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த பொதுத் தேர்தலில் இந்த அழியாத மை பயன்படுத்தப்பட்டது. நவீனம் பெருகாத அந்தக் காலத்தில் வாக்காளரிடம் அடையாள அட்டை கூட கிடையாது என்பதால் தான் மை பயன்படுத்தும் முறை வந்தது. அடையாள அட்டை பயன்பாட்டிற்கு வந்த பின்னும் கள்ள ஓட்டுக்களைத் தடுக்க தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலில் நகத்துடன் சதை இணையும் இடத்தில் ஒரு கோடு போன்று வைக்கப்படுகிறது. இந்த மையை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது. காரணம் இதுதான். ஊதாநிறமான இந்த மையை கையில் வைக்கும் போது புற ஊதா வெளிச்சம் இந்த மையின் மீது பட்டு அதன் அடர்த்தி ஏழு முதல் 25% ஆக மாறுகிறது. அப்போது மையானது மனித சருமத்தின் செல்களில் கலந்து அழிக்க முடியாத தன்மையை ஏற்படுத்துகிறது. மை வைத்து மூன்று முதல் அல்லது நான்கு நாட்களுக்கு ஊதா நிறத்திலும் பிறகு அடர் நிறத்திலும் மாறிவிடும். முதல் பத்து நாட்கள் வரை இந்த மை பளிச்சென்று காட்சியளிக்கும். அதன் பிறகு மை வைத்த சருமத்தில் இருக்கும் செல்கள் முற்றிலும் அழிந்து புதிய செல்கள் உருவாகும் போது சிறிது சிறிதாக நிறம் மாறி இறுதியில் முற்றிலும் மறையும். அதே வேளையில் அந்த இடத்தில் இருக்கும் நகம் வளர்ந்து வெட்டப்படும் வரை அப்படியே தான் இருக்கும். மை மறைய சுமார் 4 மாதங்கள் வரை ஆகலாம்.

இதையும் படியுங்கள்:
பார்ப்போரை வியக்க வைக்கும் கோயில் இசைத் தூண்கள்!
Election ink

இவ்வளவு சிறப்பு மிக்க மை எங்கு உற்பத்தி ஆகிறது?

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பெயிண்ட் அண்ட் வார்னிஷ் எனும் நிறுவனம் தான் உற்பத்தி செய்கிறது. இந்த மக்களவைத் தேர்தலுக்கும் கர்நாடக அரசின் நிறுவனமான மைசூர் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் லிமிடெட் (MPVL) 26.5 லட்சம் குப்பிகள் அழியாத மை தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் கோரி இருந்தது. ஒரு குப்பியில் இருக்கும் ஐந்து மில்லி மையை கொண்டு சுமார் 300 வாக்காளரின் கைகளில் வைக்கலாம். புதிய கண்டுபிடிப்பான இந்த மை நிரப்பப்பட்ட பேனாவை வைத்து 600 பேருக்கு மை வைக்கலாம். இந்த நிறுவனம் இந்தியா மட்டுமின்றி சுமார் 25 உலக நாடுகளுக்கும் இந்த மையை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விரல் புரட்சியின் ஹீரோவான "மை"யை நம் விரலில் வைக்க நாமும் தவறாமல் ஓட்டு போட்டு நம் கடமையை செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com