

தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர் காண்டிடேட் CANDIDATE எனப்படுகிறார்கள். இவ்வார்த்தை CANDIDUS என்ற ரோம் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. ரோம் மொழியில் இதற்கு வெள்ளை என்று அர்த்தம். ரோமாபுரியில் தேர்தலுக்கு நிற்பவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே வெள்ளை அங்கி அணிந்துகொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. அப்படி அணிந்து கொண்டவர் கள் CANDIDUS என்று அழைக்கப்பட்டார்கள். இதுவே ஆங்கிலத்தில் CANDIDATE ஆயிற்று.
இந்தியாவின் பெண்களுக்கு வாக்குரிமையை அளித்த மாநிலம் நமது சென்னைதான். தமிழகத்தில் 18 வயதுடைய அதாவது முதல் முறையாக வாக்களிக்க போகும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விரைவு தபால் மூலம் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. புதிய வாக்காளர்களுக்கு வீடு தேடி வரும் அடையாள அட்டையுடன் ஒரு முழுமையான வழிகாட்டியும் இடம்பெற்று ஒரு ஆச்சரிய பரிசு தொகுப்பாக இருக்கிறது.
இந்த தொகுப்பு ஒரு அழகான வண்ணமயமான கவரில் வருகிறது. அதில் ஒரு குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாக்களிக்க செல்வது போன்ற கார்ட்டூன் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. உங்கள் வாக்கு முக்கியமானது. வேட்பாளரை அறிவுபூர்வமாக தேர்ந்தெடுக்கவும் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அந்த உரையிலேயே அச்சிடப்பட்டுள்ளன.
அடுத்ததாக கவரில் வாக்காளர் கையேடு உள்ளது. அதில் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் நுழைந்தது முதல் மை வைப்பது வாக்கு எந்திரத்தில் பொத்தானை அழுத்துவது மற்றும் விவி பாட் திரையில் ஏழு வினாடிகள் சரி பார்ப்பது வரை வரிசையாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் உதவி செயலி இணையதளம் மற்றும் 1950 என்ற உதவி எண் மூலம் தகவல்களை பெரும் வசதிகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளான சாய்வு தளம் சக்கர நாற்காலி குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய வாக்காளர்கள் இவைகளை எல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு உங்களது பொன்னான வாக்கை பதியவிட்டு உங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து சரியாக பொத்தானை அமுக்கிவிட்டு வாருங்கள். வாக்களிப்பது உங்கள் உரிமை ஜனநாயக கடமை ஒரு விரலால் நாம்தான் எஜமானர்கள் என்பதை பதியவிடுங்கள்.