எல்லோரா மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலையின் முடிவில் சரணாந்திரி மலைகளில் இருக்கிறது. இங்கு 2 கி.மீட்டர் சுற்றளவுக்கு மொத்தம் 34 குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. இவை 6-ஆம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை மூன்று கட்டங்களில் கட்டப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். இவை 7 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே அமைக்கப்பட்டவை. மீதமிருக்கும் ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது. இவை, 9 முதல் 12-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட கடைசிக் கட்டத்தில் அமைக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
குகை எண் 10, 11 மற்றும் 12 பௌத்தத்தின் வஜ்ராயன வடிவத்தின் வளர்ச்சியையும், புத்த தெய்வங்களையும் குறிக்கின்றன. மிகவும் புகழ்பெற்ற குகை எண் 10ல் "தச்சரின் குகையின் நடுவில் 15 அடி உயரமுள்ள புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிராமணி குழுவின் முக்கிய குகையான 15ல் திருமாலின் பத்து அவதாரங்கள் கட்டப்பட்டுள்ளன. குகை 16ல் கயிலாசநாதர் கோயில், மிகப்பெரிய ஒற்றைக்கல்லில் அமைந்துள்ளது. குகை 21ல் ராமேஸ்ராவும் குகை 29ல் தூமர் லீனாவும் அமைந்துள்ளன.
சுமார் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயில் மேலிருந்து கீழ் நோக்கிச் செதுக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்ட பிரமிப்பூட்டும் ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.
கயிலாசநாதர் கோயிலை உருவாக்கியவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி.757 முதல் கி.பி.773 வரை ஆகும். இந்த ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. பார்வதியோடும் நந்தியோடும் சிவன் இருக்கும் கயிலையை, ராவணன் தூக்கி எறிய முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர, அந்த 9 தலைகளையும் ஈசன் மாலையாகக் கோத்து அணிந்திருக்கும் சிற்பமும் மிகவும் சிறப்புப் பெற்றது.
30 முதல் 34 வரையுள்ள ஜெயின் குகைகள் சமணத்தின், திகம்பர பிரிவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த ஓவியங்களாகும். இவற்றில் சோட்டா கைலாசு, இந்திர சபா, சகன்னாத சபா ஆகியவை முக்கியமானவை.
நுழைவாயிலிலும் உள்ளே ஒரு நந்தி சிற்பம், இசைக் கலைஞர்களால் சூழப்பட்ட ஒரு பெரிய நடராஜர் மற்றும் எருமை வடிவ அரக்க மன்னனைக் கொன்ற துர்கா சிலையும் உள்ளது. யானைகள் மற்றும் மிதுனா உருவங்கள் ரமேஸ்வரர் குகையின் சிறப்புகளாகும்.
ராவண-கி-கை என்று அழைக்கப்படும் குகையில் ஒரு பெரிய தூண் முற்றமும், அகலமான நடைபாதை மற்றும் உட்புற கருவறைக்குச் செல்லும் 16 அலங்கரிக்கப்பட்ட தூண்கள் கொண்ட ஒரு மண்டபமும் கொண்டது. உட்புற சுவர்களை ஐந்தாகப் பிரித்து அலங்கரித்துள்ளனர். முற்றத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் சைவ மற்றும் வைணவ நம்பிக்கையின் சிற்பக் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வடக்கு சுவரில் பவானி, கஜலட்சுமி, வராகா, விஷ்ணு மற்றும் லட்சுமியின் சிற்பங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் மகிசாசுரமர்தினி, சிவபெருமான் மற்றும் பார்வதி, நடராஜர் மற்றும் அந்தகாசுரன் ஆகியோரின் உருவங்களும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவரின் தெற்குச் சுவரில் இந்தச் சிற்பக் காட்சிகளின் பக்கவாட்டில் சப்த மாதர் என்று அழைக்கப்படும் ஏழு தெய்வீகத் தாய்மார்கள் (பிரம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி) ஆகியோரின் வாகனமாகச் சொல்லப்படும் உயிரினங்களுடன் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. எல்லோராவை எல்லோரும் மயங்கும் ஓர் இடம் என்று உறுதியுடன் சொல்ல்லாம். வாழ்வில் ஒருமுறை நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஓர் இடம் எல்லோராவாகும்.