ஓவிய மாளிகையாக விளங்கும் எல்லோரா கயிலாசநாதர் கோயில்!

Ellora Kailasanathar Temple is a painting Palace
Ellora Kailasanathar Temple is a painting Palacehttps://www.lonelyplanet.com
Published on

காராஷ்டிரா மாநிலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஔரங்காபாத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது எல்லோரா குகை. இங்கு அமைந்துள்ள கயிலாசநாதர் கோயிலை ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் நிர்மாணித்ததாகக் கூறப்படுகிறது.

முகலாய மன்னர் ஔரங்கசீப் இக்கோயிலை அழிக்க ஆணையிட்டு 1682ல் ஆயிரம் பேரை அனுப்பி வைத்தார். இருப்பினும் மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சித்தும் இக்கோயிலில் சிறிய சேதங்களையே அவர்களால் உருவாக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோரா சிற்பம்
எல்லோரா சிற்பம்https://mymodernmet.com

கயிலாசநாதர் கோயில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தை சரியாக கணிக்க முடியவில்லை. இருப்பினும், இக்கோவிலின் கற்கள் 6000 வருடம் பழைமையாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இக்கோயிலை உலக மக்கள் ஒரு அதிசயமாகக் கருதுகிறார்கள். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இதுவும் ஒன்றாக உள்ளது.

சயாத்ரி மலைத்தொடரில் உள்ள செங்குத்தான கற்களிலிருந்து இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள். பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் மொத்தம் 34 உள்ளது. 1 முதல் 12 புத்தரைப் பற்றியது. 13 முதல் 29 பிராமணர்களைப் பற்றியது, 30 முதல் 34 வரை ஜெயினர்களைப் பற்றியது. எல்லோரா கோயிலில் உள்ள 16வது குகை பெரிய ஒற்றைக்கல்லால் வெட்டப்பட்ட கோயிலாகும்.

கயிலாசநாதர் கோயில் 300 அடி நீளமும் 175 அடி அகலமும் கொண்டதாகும். எல்லோரா கோயில் மேலிருந்து கீழாகக் கட்டப்பட்டுள்ளது. மற்ற கோயில்களெல்லாம் கீழிருந்து மேலாகவே கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் சுத்தி மற்றும் உளியை கொண்டே இக்கோயிலை வடித்திருப்பது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள கோயில்களின் கட்டடக்கலையில் இது தலைசிறந்த படைப்பாக விளங்குகிறது.

மனிகேஷவர் குகை கோயில் என்று பெயர் வரக் காரணம், இதைக் கட்டியது எல்லாபுரத்தை சேர்ந்த ராணி மாணிக்கவதியாகும். அலஜபுரா ராஜாவிற்கு அவர் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தால் தீர்க்க முடியாத நோய் இருந்தது. ஒருமுறை அவர் மஹிஷமாலாவிற்கு வேட்டைக்காக சென்றபோது அவருடன் சென்ற ராணி அங்கே இருந்த கிரினேஷ்வரிடம் வேண்டிக்கொண்டு, ராஜாவின் தீர்க்க முடியாத நோய் தீர்ந்துபோனால் கோயில் கட்டுவதாக வாக்கு கொடுக்கிறார்.

எல்லோரா சிற்பம்
எல்லோரா சிற்பம்https://artincontext.org

மஹிஷமாலாவில் இருந்த குளத்தில் ராஜா குளித்துவிட்டு எழுந்தவர் குணமானதை ராணியிடம் கூற இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ராணி உடனே சிவபெருமானிற்கு கோயில் கட்ட உத்தரவிட்டார். அதுமட்டுமில்லாமல் கோயில் கோபுரத்தை காணும் வரை உணவருந்தப்போவதில்லை என்று விரதமிருந்தார். ஆனால், யாராலும் அவ்வளவு குறைந்த காலத்தில் கோயிலை கட்ட முடியாது என்று கூறினார்கள். கோகசா எனும் சிற்பி இந்த சவாலை ஏற்றுக்கொண்டு இன்னும் ஒரு வாரத்தில் ராணி கோயில் கோபுரத்தைக் காண்பார் என்று கூறினார். கோகசாவும் அவரின் குழுவும் மேலிருந்து கீழாக கோயிலை கட்ட ஆரம்பித்தார்கள். இதனால் கோயில் கோபுரத்தை ஒரு வாரத்தில் கட்டி முடித்தனர். அந்தக் கோயிலை சுற்றி எல்லாபுரா என்ற நகரத்தையும் அமைத்தனர் என்ற வரலாறும் உண்டு.

கயிலாசநாதர் கோயில் கட்டுவதற்காக 2 மில்லியன் கியூபிக் அடி ஆழத்திற்கு தோண்டி கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தனை அடி ஆழத்திலிருந்து கற்களை எடுப்பது இயலாத காரியமாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அதை எப்படி சாத்தியப்படுத்தினார்கள் என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

இக்கோயிலை கட்டுவதற்காக குடையப்பட்ட கற்களும் எங்கே சென்றது என்பது இன்று வரை விஞ்ஞானிகளுக்கு விளங்கவில்லை. இதற்காக அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் ஒருவேளை ஏலியன் டெக்னாலஜியாக இருக்குமோ என்று நம்பப்படுகிறது. எனினும் இதற்கு சான்றுகள் ஏதுமில்லை. பாறையிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட கற்களை கரைக்கும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் சான்றுகள் கிடையாது.

இந்த இடத்தில் நிறைய குகைகள் உருவாக்கப்பட்டதற்குக் காரணம், இங்கே உள்ள கற்கள் மிகவும் மென்மையானது. உளியால் மிகவும் சுலபமாக வடிவமைப்பதற்கு எளிதாக இருக்குமாம். அதனால் ஒரு குழு குகையை உருவாக்குவதும் இன்னொரு குழு அதில் சிற்பங்களை செதுக்குவதாகவும் செயல்பட்டிருக்கக் கூடும் என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிற்பியின் பெயரால் அழைக்கப்படும் கலைக்கோயில்!
Ellora Kailasanathar Temple is a painting Palace

கயிலாசநாதர் கோயிலும் விருபாக்ஷா கோயிலும் ஒரே வகையில் கட்டப்பட்டிருக்கிறது. எனினும், கயிலாசநாதர் கோயில் அதை விட இரண்டு மடங்கு பெரியதாகும். கயிலாசநாதர் கோயிலை வெள்ளை சுண்ணாம்பு பிளாஸ்டரால் கட்டப்பட்டுள்ளதற்குக் காரணம் புனித தலமான கயிலாச மலையை போன்றே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. மொத்த கோயிலும் ஓவியங்களாலும் சுண்ணாம்பு பிளாஸ்டர்களாலும் நிரம்பி உள்ளதால் இதை ஓவிய மாளிகை என்றே கூறுகிறார்கள். இது கயிலாச மலை சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படுவது போலவே நினைத்து கட்டியுள்ளனர் என்று நம்பப்படுகிறது. ராவண அனுகிரக மூர்த்தியின் சிலை கோயிலின் தெற்கில் அமைந்திருப்பதும் இதற்கு கயிலாசா என்று பெயர் வரக் காரணம் என்று கூறுகிறார்கள்.

இக்கோயிலின் அமைப்பு வாயிற்கதவில் இருந்து உள்ளே கருவறைக்குப் போகப் போக குறுகியும், வெளிச்சம் குறைந்துகொண்டே போகுமாம். இது மனிதன் சொர்க்கத்திற்கு போவதை குறிப்பதாகவும், கோயிலின் கோபுரமான சிக்காரா வானக்கோளம் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கயிலாசநாதர் கோயிலின் கட்டடக்கலை பலரையும் ஆச்சர்யத்திலும், வியப்பிலும் ஆழ்துகிறது. அதனாலேயே இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. மக்களும் இந்த அதிசயக் கோயிலை பார்வையிட்டுச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com