மங்கோலியத் தலைநகரான உலான் பத்தூருக்கு 54 கிலோ மீட்டர் கிழக்கே, தூல் ஆற்றின் கரையில் திசோஞ்சின் போல்தோக் என்ற இடத்தில் செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை (Equestrian statue of Genghis Khan) அமைக்கப்பட்டிருக்கிறது. 40 மீட்டர் உயரமுடைய துருப்பிடிக்காத எஃகுவால் செய்யப்பட்ட செங்கிஸ் கானின் சிலை உலகிலேயே மிக உயரமான குதிரையேற்றச் சிலையாகும்.
ஒரு புராணக் கதையின் படி, இங்குதான் செங்கிஸ் கான் ஒரு தங்கக் குதிரைச் சாட்டையைக் கண்டெடுத்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இச்சிலையானது ஒரு அடையாளமாக இவர் பிறந்த இடத்தை நோக்கிக் கிழக்கேத் திரும்பியுள்ளது. செங்கிஸ் கான் சிலை வளாகத்தின் மேல் இச்சிலை அமைந்துள்ளது. இந்த வளாகத்திற்குப் பலர் வருகை புரிகின்றனர். இந்த வளாகமும் கூட 10 மீட்டர் உயரமுடையதாகும். இந்த வளாகத்தில் 36 தூண்கள் உள்ளன. செங்கிஸ் கான் முதல் லிக்டன் கான் வரையிலான 36 கான்களை (கான் என்பதற்கு தளபதி அல்லது தலைவர்கள் எனப் பொருள் கொள்ளலாம்) இந்தத் தூண்கள் குறிக்கின்றன. இதைச் சிற்பி எர்தெம்பிலேக் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் எங்சர்கல் ஆகியோர் வடிவமைத்தனர். இச்சிலை 2008 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இங்கு வருகை புரிபவர்கள் குதிரையின் தலைக்கு அதன் மார்பு மற்றும் கழுத்து வழியாக நடந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் பழங்குடி இனங்களால் பயன்படுத்தப்பட்ட குதிரைக் குறியீடுகளின் அமைப்பை போல் இந்த கெர்கள் சீராக வடிவமைக்கப்பட்டுள்ளன. த கென்கோ டூர் பிரு என்ற ஒரு மங்கோலிய நிறுவனத்தால் இச்சிலை அமைக்கப்பட்டது.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது மங்கோலியாவின் வெண்கலக் காலம் மற்றும் சியோங்னு தொல்லியல் கலாச்சாரங்களுடன் தொடர்புடைய பொருட்காட்சிகளைக் கொண்டுள்ளது. அன்றாடப் பாத்திரங்கள், இடுப்புப்பட்டைக் கொளுவி, கத்திகள், புனித விலங்குகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பொருட்காட்சியானது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டின் மகா கான் காலத்தைக் காட்சிப்படுத்துகிறது. அதில் பண்டைய கருவிகள், பொற்கொல்லர் பொருட்கள் மற்றும் சில நெசுத்தோரியச் சிலுவைகளும், ஜெபமாலைகளும் உள்ளன. அருங்காட்சியகத்துக்குப் பக்கவாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான மற்றும் பொழுது போக்குக்கான மையம் உள்ளது. இது 520 ஏக்கர்கள் பரப்பளவில் உள்ளது.
இந்தச் சிலைப் பகுதியைச் சுற்றி 200 கெர்கள் உள்ளன. சரி, கெர் என்பது என்ன? கெர்கள் என்பது யூர்ட் (Yurt) எனப்படும் ஒரு வகையான வீடுகளாகும். இவ்வகை வீடுகள் கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைத் துணியாலான, இடத்துக்கிடம் மாற்றி அமைக்கத்தக்க வீடாகும். இவ்வகை வீடுகள் நடு ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.