65 ஆண்டுகளைக் கடந்தும் மங்காப் புகழ் கொண்ட மணிமுத்தாறு அணை!

Manimuthar Dam
Manimuthar Dam

தாமிரபரணியின் கிளை ஆறான மணிமுத்தாற்றின் குறுக்கே அப்போதைய முதல்வர் காமராஜரால் கட்டப்பட்ட மணிமுத்தாறு அணையைப் பற்றிய முக்கியத் தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கடந்த நூற்றாண்டில் மழைநீர் வீண்க கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டன. இந்த அணைகள் அனைத்தும் பாசன வசதி மட்டுமின்றி குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்தது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் தான் ஆட்சி செய்த 9 ஆண்டுகளில் ஆழியாறு, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, கீழ்பவானி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, வீடூர் போன்ற பல அணைகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். இதில் இன்றளவும் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பயனளித்து வரும் மணிமுத்தாறு அணையின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு என்ற பகுதியில் செங்கல்தேரிக்கு அருகே உள்ள பச்சையாறு தான் மணிமுத்தாறு அருவியின் பிறப்பிடம். இந்த ஆறு அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வழியாக தாமிரபரணி ஆற்றில் கலந்து விடுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு நீர் சேர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது. இதனைத் தடுத்து, விவசாயிகளுக்கு உதவும் விதமாக மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை முன்னாள் முதல்வர் காமராசரால் 1958 ஆம் ஆண்டு, சிங்கம்பட்டி அருகே 118 அடி ஆழத்தில், 3கிமீ நீளத்துடன் கட்டப்பட்டது. மணிமுத்தாறு அணை 5,511 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. இந்த அணை கட்டப்படும் போது சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களைத் தானமாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த அருவி கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் இருப்பதால் இங்கு நிலவும் காலநிலை குளிராக இருக்கும்.

மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அசராமல் விவசாயிகளின் பாசனத் தேவையையும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. சுமார் 67,600 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த அணையின் மூலம் பாசன வசதியைப் பெறுகின்றன. மணிமுத்தாறு அணைக்கு மேலிருக்கும் மலையில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இதன் உயரம் 25 அடிகள் ஆகும். சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தில் இருந்து 17 அடி உயரத்தில் இந்த அருவி இருக்கிறது. மேலும், இந்த அருவிக்கு 80 அடிக்கு கீழே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நீச்சல் குளம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச்சிறந்த கட்டுமானமாகப் பார்க்கப்படும் முல்லைப் பெரியாறு அணை!
Manimuthar Dam

மணிமுத்தாறு அருவி மற்றும் அணை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளைக் கவர பூங்கா, செயற்கையான குகை, தென்னந்தோப்பு, மாந்தோப்பு மற்றும் மீன் பண்ணை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாஞ்சோலை மற்றும் தேயிலைத் தோட்டங்களை கண்டு ரசிக்கலாம். தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால், இங்கு சென்றால் ஊட்டி, கொடைக்கானலுக்குச் சென்ற மனநிலை உண்டாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com