அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்நாட்டின் நலனுக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், அது மற்ற நாடுகளுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர் கடைபிடிக்கவும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதிக்கான கடும் இறுக்கமான சில கட்டுப்பாடுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வாகனம் செலுத்தத் தடை: அமெரிக்காவின் இப்போதைய ஜனாதிபதியாக இருப்பவரும், முன்னாள் ஜனாதிபதிகள், துணை ஜனாதிபதிகள் என எவரும் அவரது வாழ்நாள் முழுக்க வீதிகளில் கார் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கும் பங்களாக்களில், விடுமுறை கொண்டாட்டங்களின்போது வேண்டுமானால் ஆசை தீர கார் ஓட்டலாம்.
2. கைப்பேசி பயன்படுத்தத் தடை: பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவர் சொந்தமாக கைபேசி மற்றும் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோதுதான் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட ஐ பேடும், ஜோ பைடன் ஆப்பிள் கடிகாரமும், முன்பு டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, குறுகிய காலத்துக்கு கைபேசிகளை வைத்திருந்தார்கள்.
3. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை: பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதியாக இருப்பவரின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பாடசாலைகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது.
4. சமூக ஊடகங்கள் பக்கம் வரக்கூடாது: அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தால் ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் ஊடகங்கள் பக்கம் வரவே கூடாது.
5. அமெரிக்க ஏர்லைன்ஸ் பயன்படுத்தத் தடை: அமெரிக்க ஏர்லைன்ஸில் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் பயணிக்க முடியாது. அதற்கு அவரது ரகசிய பாதுகாப்பு சேவை அமைப்பு நிச்சயம் ஒப்புக்கொள்ளாது. அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான தனி விமானத்தில் மட்டுமே ஜனாதிபதி பயணிக்க முடியும்.
6. ஜன்னல் கதவுகளை திறக்கக் கூடாது: அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், வெளியே குளுகுளு என தென்றல் காற்று வீசினாலும் அறையின் ஜன்னல் கதவுகளைத் திறக்கக் கூடாது. அமெரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, யாரும் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஜன்னல் கதவுகளைத் திறக்கக் கூடாது.
7. ஆவணங்களை தூக்கிப் போடத் தடை: அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் தேவையற்ற மின்னஞ்சல்களை அழிக்கக் கூடாது. எந்த ஆவணங்களையும் குப்பை என்று தூக்கிப் போடவும் கூடாது. ஒவ்வொரு துண்டுச் சீட்டும் கூட வெள்ளை மாளிகை ஊழியர்களின் ஆய்வுக்கு உள்பட்ட பிறகே அவர்களால்தான் அது குப்பையில் போட வேண்டியது என்று உறுதி செய்யப்படும்.
‘பெரியண்ணன்’ என்ற நினைப்பில் இருக்கும் அமெரிக்க அதிபருக்குக் கூட சாதாரண மக்கள் அனுபவிக்கும் சுகங்களை அனுபவிக்கக் கட்டுப்பாடுகள் இருப்பது இதன் மூலம் தெளிவுபடுகிறது.