கதவுகள் இல்லாத கிராமம்: மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷானி ஷிங்னாபூர். இந்த கிராமத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை. ஆம்! இங்கு வாழும் மக்கள் தங்கள் உடைமைகளை இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல, இதுவரை இந்த கிராமத்தில் கொலைகள் மற்றும் கொள்ளைகள் நடக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள வீடு, அலுவலகம், கோயில், மண்டபம், ஏன் வங்கிகளுக்குக் கூட கதவுகள் கிடையாதாம். கழிவறைக்கும் கதவுகள் என்று வைத்திருப்பதில்லை. அட்டை அல்லது திரைகள் போட்டுதான் மறைத்திருப்பார்களாம்.
இந்தியாவின் பாம்பு கிராமம்: மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள புனேவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஷெட்பால் கிராமம். இந்தியாவின் பாம்பு கிராமம் என்று இது அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் பாம்புகள் இருக்கின்றன. பாம்புகளுக்கு கூடுதல் கவனிப்புடன் கிராம மக்கள் உணவளிக்கின்றனர். அவர்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடம் பாம்புகளுக்கு இருக்கும்.
இக்கிராமத்தில் உள்ள பாம்புகளின் எண்ணிக்கை மனிதர்களை விட அதிகமாக உள்ளது. குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுகிறார்கள். இந்த கிராமத்தில் இதுவரை யாரையும் பாம்பு கடித்ததில்லை. இங்கே, எந்த தோட்ட வகை பாம்புகளுக்கும் முக்கியமில்லை. உலகில் மிகவும் பயப்படும் பாம்புகளில் ஒன்றான இந்திய நாகப்பாம்புகளுக்குத்தான் இங்கு முக்கியத்துவம்.
ராம் கிராமம்: ‘ராம் ஜென்மபூமி’ என்றழைக்கப்படும் அயோத்திக்கு 750 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் மாவட்டம்தான் பங்குரா. இங்குள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிட்டத்தட்ட 500 வருடங்களாக ‘ராம்’ என்ற பெயரை பெயரின் முன்னோ அல்லது பின்னோ பயன்படுத்தி வருகிறார்கள். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவர்களின் மூதாதையர்கள் வருடா வருடம் ஒரு ராமர் அந்த கிராமத்தில் பிறக்கிறார் என்று நம்பினார்கள்.
வீட்டில் சமைக்காத கிராமம்: வீட்டில் சமையல் கூடம் இருந்தாலும் வீட்டில் ஒருவர் கூட சமைக்காத கிராமம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நம் இந்தியாவில் அப்படி ஒரு கிராமம் உள்ளது. அது பல ஆண்டுகளாக உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதுதான் குஜராத்தில் உள்ள சந்தங்கி (Chandanki) கிராமம். சந்தங்கி கிராமம் மெஹ்சானா மாவட்டத்தில் பெச்சராஜி தாலுகாவில் அமைந்துள்ளது. இங்கு வீட்டில் யாரும் சமைப்பதில்லை. சந்தங்கியில் இன்று குறைந்தது 1,000 பேர் இருப்பார்கள். இவர்கள் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஒருவர் மாதம் 2000 ரூபாய் சமுதாய கூடத்திற்கு வழங்க வேண்டும். இங்கு அனைவரும் இணைந்து சமைக்கிறார்கள்.
பாலை விற்பனைக்கு தராத கிராமம்: ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தாங்கள் வளர்க்கும் பசுக்கள் மற்றும் எருமைகளின் பாலை எந்த ஒரு நிறுவனங்களுக்கோ அல்லது மக்களுக்கோ தலைமுறை தலைமுறையாக விற்பனைக்குத் தருவதில்லை. இந்த கிராமத்திற்கு பழங்காலத்தில் வந்த துறவி ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இப்படி பாலை விற்பனைக்கு தராமல் உள்ளனர்.
இந்த கிராமத்தில் பசு மற்றும் எருமை மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை கொண்டு சுத்தமான தயிர் மற்றும் நெய் தயாரித்து விற்கிறார்கள். இதனாலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த கிராமம் ‘நெய் வாலா பக் காவ்ன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் ஒருவரது வீட்டில் திருமணம் அல்லது சமூக அல்லது மத நிகழ்ச்சிகள் நடந்தால், அந்த கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், அவர்களுக்கு இலவசமாக பால் வழங்கி உதவி செய்கிறார்கள்.
முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமம்: மகாராஷ்டிரா மாநிலம் அகில்யா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சவுண்டாலா. கடந்த 2011ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தக் கிராமத்தில் 1800 பேர் வசித்தனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா திகழ்கிறது.
இக்கிராமத்தில், கணவரை இழந்த பெண்கள், மறுமணம் செய்துகொள்ள, கிராம ஊராட்சி சார்பில் 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், கணவரை இழந்த பெண்கள், வளையல் அணியவும், குங்குமம், பூ வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பெண்களை யாரும் இங்கே இழிவாகப் பேசக் கூடாது என்பது விதியாக உள்ளது.