
வழக்கமாக ஒவ்வொரு ஊரிலும் அனைவரிடமும் பயன்படுத்த இருசக்கர வாகனம் கட்டாயம் இருக்கும், சில பெரிய ஊர்களில் ஒவ்வொரிடமும் கார்கள் இருக்கும். ஆனால் , இந்த ஒரு ஊரில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக விமானம் வைத்துள்ளனர். இதைக் கேட்டாலே ஆச்சரியமாக இருக்கும்.
அமெரிக்காவில் உள்ள ஒரு ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் சொந்த விமானங்களை வைத்துள்ளனர். இங்கு காலையில் வேலைக்கு செல்ல ஆண்களும் பெண்களும் கேரஜை திறந்து, விமானத்தை வெளியே எடுத்து, அதை சாலையில் ஓட்டி மேலே பறக்கின்றனர். மாலையில் விமானத்தை தரை இறக்கி கேரேஜ் வாயிலை ரிமோட் மூலம் திறந்து விமானத்தை உள்ளே வைத்து வாயிலை சாத்துகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சியாரா நெவாடா மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமமான கேமரூன் ஏர்பார்கை பற்றித் தான் மேலே குறிப்பிட்டு இருந்தோம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவில் பல விமான நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டன. இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு நிலையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. விமானிகள் மற்றும் விமான ஆர்வலர்களுக்காக, தங்கள் விமானங்களை வீட்டிலேயே வைக்கக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது. இதன் அடிப்படையில் கேமருன் ஏர்பார்க் 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு வீடுகளின் வாசலிலும் ஒவ்வொரு விமானம் இருக்கும். ஒவ்வொருவரும் விமானம் வைத்திருக்க பெரிய அளவில் கேரஜ்களையும் கட்டியுள்ளனர். இங்குள்ள சாலை மிகவும் விசாலமானதாக இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதை போல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இங்கு வசிக்கும் மக்கள் வேலைக்குச் செல்லவும் மற்ற வேலைகளைச் செய்யவும் தங்கள் விமானங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஓய்வு பெற்ற இராணுவ விமானிகள். அமெரிக்காவில் ஒரு விமானத்தை ஓட்டுவதற்கு பயிற்சி மற்றும் விமானி உரிமம் கட்டாயமாகும்.
இங்குள்ள சாலைகளில் அறிவிப்புப் பலகைகள் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் சாலைகள், விமான நிலைய ஓடுபாதையை விட அகலமாக உள்ளன, ஏனெனில் அவை விமானங்களும் கார்களும் ஒன்றையொன்று பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில் சாலையில் விமானங்கள் ஒரு வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கு உள்ளது.
உலகில் சுமார் 640 விமான குடியிருப்பு பூங்காக்கள் இருந்தாலும், கேமரூன் ஏர்பார்க் மிகவும் அழகான ஒன்றாகக் கூறப்படுகிறது. தற்போது இங்கு 20 காலி மனைகள் மட்டுமே உள்ளது. இங்கு விற்பனைக்கு வந்த ஒரு வீட்டின் மதிப்பு $1.5 மில்லியன் ஆகும். போயஸ் கார்டனை விட மலிவாக இருந்தாலும் பொதுவாக இந்த இடமும் விலை உயர்ந்தது தான். இந்த நகரம் முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது. வெளியாட்கள் உரிமையாளர்களின் அனுமதியுடன் மட்டுமே இங்கு நுழைய முடியும்.
கேமரூன் ஏர்பார்க்கைப் போலவே, புளோரிடா மாநிலத்தில் ஸ்ப்ரூஸ்க்ரீக் என்ற இடத்தில் மிகப்பெரிய விமான போக்குவரத்து சமூகம் உள்ளது. இங்கு தனியார் ஜெட் விமானங்கள் முதல் வரலாற்று சிறப்புமிக்க விமானங்கள் உள்பட மொத்தம் 650 விமானங்கள் உள்ளது. இந்தப் விமான போக்குவரத்து சமூகத்தில் சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு 1300 வீடுகளும் 700 விமான பார்க்கிங்களும் உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 426 குடியிருப்பு விமான நிலையங்கள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு காலத்தில் விமானத்தின் விலை மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத் தக்கது.