அலாஸ்காவில் 10 பேர் பயணித்த விமானம் ஒன்று காணாமல் போய்விட்டது. அதில் பயணித்தவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
விமானம் குறித்தான செய்திகள் தற்போது அடிக்கடி வருகிறது. விமான விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றன. அதேபோல், பயணிகளை காக்க வைப்பது, பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்யாதது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு விமானம் மாயமாகி இருக்கிறது.
பெரிங் ஏர் 445 ரக விமானம் நேற்று (06) பிற்பகல் பெரிங் கடலுக்கு மேலே நோம் நகரத்திற்கு செல்லும் பாதையில் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன அந்த விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பொதுப் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளை மலை பகுதியில் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடும் பணி நடந்து வருகிறது. அதேபோல, கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் இரண்டு விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இருக்கும் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென பாதை மாறியதாகவும் ஹெலிகாப்டர் மீது மோதியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்து இதுவே ஆகும்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.