

மின்ட், பிராட்வே, பூக்கடை, சென்ட்ரல் என சென்னையில் பல இடங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. இதுபோல ஒரு பிரபலமான பகுதியாக விளங்கி வருவது ஏழு கிணறு. தற்போது மின்ட் என்று அழைக்கப்படும் தங்கசாலைப் பகுதியில் ஏழு கிணறு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு ஏன் ஏழு கிணறு என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு கிணறு போதாதா? ஏன் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன? இதிலிருந்து பெறப்பட்ட தண்ணீர் யாருக்கெல்லாம் பயன்பட்டது? இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோம் பகுதியில் குடியேறி வாசனை திரவியங்கள் மற்றும் துணி வியாபாரத்தைச் செய்து வந்தனர். சென்னை நகரம் 1746 வரை பிரெஞ்சுக்காரர்களின் கீழ் இருந்து வந்தது. இதன் பின்னர் 1947 வரை சென்னை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கடற்கரையை ஒட்டி அமைந்திருந்ததால் புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் உப்புநீரே கிடைத்தது. அங்கு வசிப்போர் இதை குடிக்கப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானது.
இதற்குத் தீர்வாக என்ன செய்யலாம் என்று ஆங்கிலேயர்கள் யோசித்த போது கேப்டன் பேகர் என்ற ஆங்கிலேய தளபதி ஒரு யோசனையைக் கூறினார். அக்காலத்தில் நாணயசாலையாக விளங்கிய மின்ட் பகுதியில் கிணறுகளை உருவாக்கி அதிலிருந்து தண்ணீரைப் பெற்று சுத்திகரித்துத் தேக்கி அதை குடிநீர் பயன்பாட்டிற்காக ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பிப் பயன்படுத்தலாம் என்ற யோசனையைக் கூற அதை ஆட்சியாளர்கள் ஏற்றனர்.
அன்றைய குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 1772 ஆம் ஆண்டில் இப்பகுதியில் மொத்தம் பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. தங்கசாலைப் பகுதியில் கடலிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஏழு கிணறுகள் வெட்டப்பட்டன. பதினாறு அடி விட்டமும் சுமார் முப்பது அடி ஆழமும் கொண்ட பத்துக் கிணறுகள் வெட்டப்பட்டன. பத்து கிணறுகளில் நல்ல ஊற்று நீர் ஏழு கிணறுகளில்தான் கிடைத்தது. எனவே ஏழு கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தினார்கள். இதனால் இப்பகுதிக்கு ஏழு கிணறு (Sevel Wells) என்ற பெயரே நிலைத்துவிட்டது. இந்த திட்டத்தை முடிக்க அப்போது ஆன செலவு வெறும் நாற்பத்தி மூன்றாயிரம் ரூபாய்.
பேகரின் திட்டம் செயல்படுத்தப்பட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுமார் ஆறாயிரம் பேர்களின் தினசரி தண்ணீர் தேவையை சுமார் ஏழு வருடங்களுக்குத் தீர்த்து வைத்தது. ஏழு கிணறுகளில் இருந்து தண்ணீரானது மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் விநியோகிப்பட்டது.
தொடக்கத்தில் ஆங்கிலேய அரசு ஏழு கிணறு திட்டத்திலிருந்து பெற்ற குடிநீரை கோட்டையில் வசித்த மக்களுக்கு மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தியது. பின்னர் இதை அருகில் இருந்த ராணுவ மையம் மற்றும் பிரசிடென்ஸி குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் விநியோகிக்க ஆரம்பித்தது.
ஏழு கிணறுத் திட்டமே சென்னை நகரின் முதல் குடிநீர் திட்டமாகக் கருதப்படுகிறது. மக்கள் தொகை பெருகப் பெருக இதைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் குடிநீர் திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டன.