- கார்த்திகா
தமிழகத்தின் பழம்பெரும் விளையாட்டுக்களில் இன்றளவும் எஞ்சியிருப்பன, சில விளையாட்டுகள் மட்டுமே. அவற்றில் மிக முக்கியமானது 'பல்லாங்குழி'. பல்லாங்குழி ஆட்டம் பொதுவாக பெண்களால் ஆடப்படுகிறது. பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்கு உரிய காலத்திலும், கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுதுபோக்குவதற்கும் மட்டுமே உபயோகப்படுத்திய இந்த விளையாட்டை இப்பொழுது பலரும் பல நேரங்களில் ஆடிப்பார்க்கிறார்கள். பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களுடன் பல்லாங்குழியை கொடுக்கும் வழக்கம் அந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இன்றளவும் சில சிற்றூர்களில் இந்த பழக்கம் கடைபிடிப்பதை காண முடிகிறது. இவ்வாறான பல்லாங்குழியின், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்!
பல்லாங்குழி ஆடும் முறை:
இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளுடன் ஆட்டம் தொடங்குகிறது.
முதல் நபர் தன்னுடைய காய்களை எடுத்து ஆடும் பொழுது ஆட்டத்தின் சமத்தன்மை முதல் முறையாக குறைகிறது.
சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியில் உள்ள காய்களை முதலில் ஆடுபவர் எடுக்கும் பொழுது நிறைய காய்கள் கிடைக்கின்றன, அல்லது குறைந்த காய்களை உடைய குழி கிடைக்கிறது.
ஒரு வெற்றுக்குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினை இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதை 'பசு' என்று சொல்லி அந்த குழிக்குரியவர் எடுத்துக்கொள்வார். இதனால் ஆட்ட துவக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் மீண்டும் ஒரு குழியில் கிட்டுவதே இல்லை.
ஆட்ட இறுதியில் தோற்பவரின் கையில் எஞ்சி நான்கு காய்கள் மட்டும் இருக்கும் பட்சத்தில், குழிக்கு ஒரு காய் வீதம் இட்டு ஆட்டம் துவங்குகிறது. இதற்கு 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். (கஞ்சி என்ற சொல் வறுமையை உணர்த்தும் குறியீடாகும்.)
தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் இருக்கும்போது ஆட்டம் முற்று பெருகிறது.
பல்லாங்குழியின் வரலாற்று முக்கியத்துவம்:
இன்றைய சூழலில் விளையாட்டு என்பது பொதுவாக பொழுதை போக்கும் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சங்ககாலம் தொட்டே, விளையாட்டுக்கள் சமூக அல்லது தனிமனித வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியே இருந்து வந்துள்ளது.
விளையாட்டின் அடிக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் தத்துவங்கள் இந்த காலத்திற்கும் ஏற்புடையதாகவே இருக்கின்றன.
சமதன்மை நிலவி வந்த பழைய சமூகத்தில் ஆட்டத்தின் பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவரின் செல்வம் அடுத்தவரின் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாக போய்ச்சேர்ந்துவிடுகிறது. இதனால் தோற்றவரின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது.
தனி உடைமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சியின் விளைவாகவே தனி மனித மனங்களில் திணிக்கப்பட்ட தனிச்சொத்துரிமை வளர்ச்சி மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் செய்ய வேண்டியது!
இன்றைக்கு செல்போன்கள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதனால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பொழுதுபோக்கின் பெரும் நேரத்தை இவ்வாறான செல்போன்களே எடுத்துக்கொள்கின்றன. இன்றைய நவீன சூழலில் வளரும் குழந்தைகளுக்கு வெளி விளையாட்டுகள் சாத்தியமற்ற ஒன்றாகவே ஆகிவிட்டது. இருப்பினும் வீட்டின் உள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை சொல்லிக்கொடுப்பதும், அதன் வரலாற்றை கதைகளாக சொல்வதும், அந்த விளையாட்டின் உங்கள் கடந்த கால அனுபவங்களைச் சொல்வதும், குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி வரலாறு குறித்த அவர்களின் பார்வையை மாற்றும்!